அமெரிக்கா சென்ற பிரதமர் மோடிக்கு இந்தியர்கள் உற்சாக வரவேற்பு


அமெரிக்கா சென்ற பிரதமர் மோடிக்கு இந்தியர்கள் உற்சாக வரவேற்பு
x
தினத்தந்தி 25 Jun 2017 4:17 AM GMT (Updated: 25 Jun 2017 4:17 AM GMT)

அமெரிக்கா சென்று உள்ள பிரதமர் மோடிக்கு இந்தியர்கள் உற்சாக வரவேற்பை அளித்தனர்.


வாஷிங்டன்,


அரசு முறை பயணமாக 3 நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதற்கட்டமாக போர்ச்சுகல் பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி அமெரிக்கா சென்று உள்ளார். அமெரிக்காவில் மிகவும் பாதுகாப்பு நிறைந்த ஓட்டலில் தங்கி உள்ளார். ஓட்டலுக்கு வெளியே குழுமியிருந்த அமெரிக்க வாழ் இந்தியவர்கள் அவரை உற்சாகமாக வரவேற்றனர். மோடி, மோடி என கரகோஷம் எழுப்பி தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பிரதமர் மோடியின் மூன்று நாள் அமெரிக்க பயணமானது இன்று தொடங்கி உள்ளது. பிரதமர் மோடி முதல்கட்டமாக அமெரிக்காவின் முக்கிய சிஇஒக்கள் 20 பேரிடம் ஆலோசனை நடத்துகிறார். 

ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஒ டிம் குக், வால்மார்ட் நிறுவனத்தின் சிஇஒ டக் மெமில்லான், கூகுள் நிறுவனத்தின் சிஇஒ சுந்தர்பிச்சை மற்றும் மைக்ரோசாப்ட் தலைமை அதிகாரி சத்ய நாதல்லா ஆகியோர் பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் விர்ஜினியாவில் புறநகர் பகுதியில் அமெரிக்கவாழ் இந்திய சமூதாயத்தினர் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்கிறார். இதில் 600 பேர் பங்கேற்கலாம்.

திங்கள் கிழமை மதியம் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பிரதமர் மோடிக்கு விருந்து அளிக்கிறார். இருதரப்பு உறவு குறித்தான பேச்சுவார்த்தை, பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரம் தொடர்பான ஆலோசனைக்கு இருநாட்டு தலைவர்களும் சுமார் 5 மணிநேரம் செலவிடுகின்றனர். 

இருநாட்டு தலைவர்களும் செய்தியாளர்களிடம் கூட்டாக பேசமாட்டார்கள், ஆனால் தனித்தனியாக அறிக்கையை வெளியிடுவார்கள். பிரதமர் மோடி அமெரிக்கா செல்வதற்கு முன்னதாக டுவிட்டரில் தகவல் வெளியிட்ட டொனால்டு டிரம்ப், “இந்தியப் பிரதமர் மோடியை வரவேற்கும் சமயத்தை எதிர்நோக்குகிறேன். உண்மையான நண்பரான அவரிடம் பல ராஜதந்திர விஷயங்கள் குறித்து விவாதிக்கவுள்ளேன்” என்றார். பலமுறை மோடியும், டிரம்பும் தொலைபேசியில் பேசியிருந்தாலும் நேரில் சந்திப்பது இதுவே முதல்முறையாகும். 


Next Story