பாரதீய ஜனதா ஆட்சியில் ஊழல் எதுவும் நடைபெறவில்லை


பாரதீய ஜனதா ஆட்சியில் ஊழல் எதுவும் நடைபெறவில்லை
x
தினத்தந்தி 26 Jun 2017 11:45 PM GMT (Updated: 2017-06-27T00:38:34+05:30)

அமெரிக்காவில் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, பாரதீய ஜனதா ஆட்சியில் ஊழல் எதுவும் நடைபெறவில்லை என கூறினார்.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடிக்கு விர்ஜீனியாவில் வாழும் இந்தியர்கள் வரவேற்பு அளித்தனர். 600–க்கும் மேற்பட்ட அமெரிக்கவாழ் இந்தியர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:–

இந்தியர்கள் ஊழலை வெறுக்கின்றனர். இந்தியாவில் கடந்த காலங்களில் அமைந்த ஆட்சிகள் அகற்றப்பட்டதற்கு முக்கிய காரணமே ஊழல்தான். ஆனால் எங்கள் பாரதீய ஜனதா அரசின் 3 ஆண்டு சாதனையே, இதுவரை ஊழலின் ஒரு கறையோ, சுவடோ இந்த அரசில் இல்லை என்பதுதான்.

பயங்கரவாதத்தை பற்றி 20 ஆண்டுகளுக்கு முன்னால் நாம் பேசும்போது, அது வெறும் சட்டம்–ஒழுங்கு பிரச்சினை என்றுதான் பல உலக நாடுகள் கூறியதுடன், அதன் வீரியத்தை உணராமலும் இருந்தன. ஆனால் பயங்கரவாதம் என்றால் என்ன? என்று அவர்களுக்கு தற்போது பயங்கரவாதிகளே உணர்த்தி வருகின்றனர்.

பயங்கரவாதத்துக்கு எதிராக துல்லியமான தாக்குதலை நாம் மேற்கொண்ட போது, நமது பலத்தை உலக நாடுகள் புரிந்து கொண்டதுடன், தன்னடக்கமான அந்த தாக்குதலையும், தேவை ஏற்படும்போதும், பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்கும், தங்களை பாதுகாத்துக்கொள்ளவும் இந்தியா தனது பலத்தை காட்ட முடியும் என்பதையும் உணர்ந்து கொண்டன.

பாகிஸ்தான் மண்ணில் இயங்கி வரும் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா மேற்கொண்ட மிகப்பெரிய நடவடிக்கையான அந்த துல்லிய தாக்குதல் குறித்து எந்த நாடும் கேள்வி கேட்கவில்லை. அந்த தாக்குதல் மூலமாக சிலர் (பாகிஸ்தான்) பாதிக்கப்பட்டது வேறு வி‌ஷயம்.

சமூக ஊடகங்கள் இன்று மிகவும் சக்தி வாய்ந்தவையாக மாறிவிட்டன. நானும் அவற்றை எப்போதும் பயன்படுத்தி வருகிறேன். ஆனால் இதை எவ்வாறு பலமாக பயன்படுத்த வேண்டும் என்பதற்கு வெளியுறவு அமைச்சகமும், மந்திரி சுஷ்மா சுவராஜும் சிறந்த உதாரணங்களாக திகழ்கின்றனர்.

உலகின் எந்த ஒரு மூலையிலும் இந்தியர்கள் அவதிப்படுவதாக வெளியுறவு அமைச்சகத்துக்கு டுவிட்டர் மூலம் தகவல் வந்தால், அது அதிகாலை 2 மணியாக இருந்தாலும் சரி, அடுத்த 15 நிமிடங்களுக்குள் சுஷ்மா சுவராஜ் பதிலளித்து விடுவார். பின்னர் அது தொடர்பாக அரசு சரியான நடவடிக்கை எடுப்பதுடன், பயன்களையும் அறுவடை செய்கிறது. இதுதான் சிறந்த நிர்வாகம்.  இவ்வாறு நரேந்திர மோடி கூறினார்.


Next Story