ஜனாதிபதி டிரம்பிற்கு மோடி அளித்த பரிசு பொருட்கள் இவை தான்!


ஜனாதிபதி டிரம்பிற்கு மோடி அளித்த பரிசு பொருட்கள் இவை தான்!
x
தினத்தந்தி 27 Jun 2017 9:13 AM GMT (Updated: 27 Jun 2017 9:13 AM GMT)

அமெரிக்காவில் அரசுமுறை பயணமாக சென்றிருந்த இந்திய பிரதமர் மோடி, ஜனாதிபதி டிரம்பிற்கு நினைவுப் பரிசுகளை வழங்கியுள்ளார்.

அமெரிக்காவில் அரசுமுறை பயணமாக சென்றிருந்த மோடி, ஜனாதிபதி டிரம்பிற்கும் அவரது மனைவிக்கும் நினைவுப் பரிசுகளை வழங்கியுள்ளதாக இந்திய பிரதமர் அலுவலகம் தமது டுவிட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளது.

வெள்ளை மாளிகைக்குச் சென்ற பிரதமர் மோடியை, ஜனாதிபதி டிரம்ப்பும் அவரது மனைவியும் வரவேற்றுள்ளனர். பிரதமர் மோடி, ஜனாதிபதி டிரம்ப்பிற்கு இந்தியாவிலிருந்து கொண்டுசென்ற பரிசுப் பொருள்களை வழங்கினார்.

52 வருடங்களுக்கு முன்னர், 1965ல் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனின் நூற்றாண்டு நினைவு விழாவை முன்னிட்டு அவருக்கு தபால்தலை வெளியிட்டுச் சிறப்பித்தது இந்தியா. அந்த தபால்தலையின் அசல் முத்திரையை வழங்கினார் மோடி.

ஜனாதிபதி ஆபிரகாம் லின்கன் மற்றும் மகாத்மா காந்தி ஆகிய இரு தலைவர்களும் பொதுமக்களின் அடிப்படை நன்மைகள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலையை அடிப்படையாகக்கொண்டு செயல்பட்டவர்கள் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கூடுதலாக, காங்க்ரா பள்ளத்தாக்கிலிருந்து புகழ்மிக்க தேயிலை மற்றும் தேன், இமாச்சலப்பிரதேசத்திலிருந்து வெள்ளிக் காப்பு ஆகியவை அடங்கிய ஒரு பெட்டியை வழங்கியுள்ளார்.

டிரம்ப்பின் மனைவி மெலானியாவுக்கு காஷ்மீர் மற்றும் ஹிமாச்சலப்பிரதேசத்திலிருந்து கைகளால் நெய்த சால்வைகளைப் பரிசாக வழங்கியுள்ளார் இந்திய பிரதமர் மோடி.



Next Story