சிக்கிம் வழியாக எங்கள் பிராந்தியத்திற்குட்பட்ட பகுதிக்குள் இந்திய ராணுவம் அத்துமீறி நுழைந்துள்ளது: சீனா சொல்கிறது


சிக்கிம் வழியாக எங்கள் பிராந்தியத்திற்குட்பட்ட பகுதிக்குள் இந்திய ராணுவம் அத்துமீறி நுழைந்துள்ளது: சீனா சொல்கிறது
x
தினத்தந்தி 27 Jun 2017 9:38 AM GMT (Updated: 2017-06-27T15:08:51+05:30)

சிக்கிம் வழியாக தங்கள் பிராந்தியத்திற்குபட்ட பகுதிக்குள் இந்திய ராணுவம் அத்துமீறி நுழைந்துள்ளது என்று சீனா தெரிவித்துள்ளது.


பெய்ஜிங்,

அருணாசல பிரதேச மாநிலம் மீது சீனா உரிமை கொண்டாடுகிறது. இதில் இந்தியா, சீனா இடையே பிரச்சினை உள்ளது. அருணாச்சால பிரதேசத்தில் திடீரென சீன ராணுவம் அத்துமீறி நுழையும் சம்பவம் எப்போதாவது நடைபெற்று வருகிறது. பின்னர் இந்தியாவின் கடும் எதிர்ப்பையடுத்து பின்வாங்கி செல்கிறது. இந்த நிலையில், சீன எல்லையையொட்டியுள்ள சிக்கிம் மாநிலம் வழியாக சீனாவின் பிராந்தியத்திற்குட்பட்ட பகுதிக்குள் இந்திய ராணுவம் எல்லையை கடந்து நுழைந்துள்ளதாக அந்நாடு இந்தியா மீது குற்றம் சுமத்தியுள்ளது. 

இது குறித்து சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் லூ காங் கூறுகையில்,” இந்திய ராணுவம் சிக்கிம் பிராந்தியம் வழியாக எல்லையை கடந்துள்ளது. எல்லையில் மோதல் காரணமாகவே கைலாஷ் மானசரோவர் கோவிலுக்கு புனித யாத்திரை மேற்கொண்டுள்ள இந்திய யாத்ரீகர்கள் நது லா பாஸ் வழியாக செல்ல அனுமதிக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்திய ராணுவத்தின் இந்த செயலை பெய்ஜிங், மற்றும் புதுடெல்லியில் உள்ள அந்நாட்டு தூதரகத்தில் ராஜாங்க ரீதியில் சீனா முறையிட்டுள்ளது. பிராந்தியத்தின் இறையாண்மையை நிலைநிறுத்த வேண்டும் என்பதில் எங்கள் நிலைப்பாடு அசைக்க முடியாதது. இந்தியாவும் இந்த விவகாரத்தில் இதே வழியில் சீனாவுடன் இணைந்து செயல்பட்டு எல்லையில் அத்துமீறியுள்ள இந்திய ராணுவத்தை உடனடியாக திரும்ப அழைக்கும் என்று நம்புகிறோம். வீரர்கள் எல்லையை கடந்த விவகாரத்தில் இந்தியா உரிய விசாரணையை மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

முன்னதாக நேற்று எல்லை விவகாரத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக கைலாச மானசரோவர் புனித யாத்திரை மேற்கொண்ட இந்தியர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக சீனா தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story