சனிக்கோளில் விடியல் எப்படி இருக்கும்? புதிய புகைபடம் எடுத்து அனுப்பிய காசினி


சனிக்கோளில் விடியல் எப்படி இருக்கும்? புதிய புகைபடம் எடுத்து அனுப்பிய காசினி
x
தினத்தந்தி 27 Jun 2017 11:34 AM GMT (Updated: 27 Jun 2017 11:34 AM GMT)

சனிக்கோளின் புதிய புகைப்படம் ஒன்றை நாசா வெளியிட்டுள்ளது.


சூரியக் குடும்பத்திலுள்ள ஒன்பது கோள்களில் 6-வதாக இருப்பது சனி. இது சூரியனில் இருந்து சுமார் 142 கோடி கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. ஒரு முறை சூரியனைச் சுற்றிவர 29 வருடங்களை எடுத்துக் கொள்கிறது. தன்னைத்தானே சுற்றிவர 10 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது.

வியாழனுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய கோள் சனியாகும். சனிக்கிரகத்திற்குள் சரியாக 763 பூமிகளை அடக்கி விடலாம் என்றாலும், சனியின் எடை, பூமியின் எடையை விட 95 மடங்கு தான் அதிகம். சனி ஒரு வாயுக்கோளம். அதில் கடினமான உட்பகுதி மிகச்சிறியது.

சனியின் ஈர்ப்பு விசை பூமியிலிருந்து அதிகம் வேறுபடவில்லை. சுமார் 1.17 மடங்கு அதிகமாக உள்ளது. பூமியில் 70 கிலோ எடையுள்ள ஒருவர் சனியில் 82 கிலோ இருப்பார். சூரியனில் இருந்து வெகு தொலைவில் இருப்பதால் சனியின் சராசரி வெப்பநிலை மிக மிகக் குறைவு. காற்று மண்டலத்தில் அமோனியா உறைந்து போவதால், கோளின் மேற்பரப்பு முழுவதும் பனிப்பிரதேசமாகவே காணப்படுகிறது. பிற கோள்களில் காணப்படாத ஒரு தட்டையான வளையம் இந்த கோளின் நடுப்பகுதியில் சுற்றி உள்ளது என்பது தான் இதன் சிறப்பு.

கோடிக்கணக்கான பனிக்கட்டிகள், சிறிதும் பெரிதுமாய் சனியை துணைக்கோள் போல் சுற்றி வருகின்றன. அவை கூட்டம் கூட்டமாக பிரிந்து பரந்த இடைவெளியுடன் கூடிய பல வளையங்களாகத் தோன்றுகின்றன. இவ்வாறு ஆயிரக் கணக்கான வளையங்கள் உள்ளன என்பது 1981-ல் அமெரிக்க விஞ்ஞானிகளால் ஏவப்பட்ட ‘வாயேஜர்’ என்று விண்கலம் மூலம் தெரிந்து கொள்ளப்பட்டது. சனிக்கு துணைக் கோள்கள் 15 அல்லது 16 இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, 1997 ம் ஆண்டு அக்., 15ம் தேதி சனி கிரக ஆராய்ச்சிக்காக காசினி  விண்கலத்தை அனுப்பியது. காசினி விண்கலம், 2004ம் ஆண்டு ஜூலை மாதம் சனி கிரகத்தின் சுற்று வட்ட பாதையில் சேர்ந்தது. அன்று முதல், 12 ஆண்டுகளாக சனி கிரகம், அதன் வளையங்கள், டைட்டன் என பெயரிடப்பட்ட சனி கிரகத்தின் துணைக்கோள் குறித்து ஏராளமான புகைப்படங்கள் மற்றும் தகவல்களை காசினி விண்கலம் பூமிக்கு அனுப்பி உள்ளது.

இந்நிலையில், சனிக்கோளின் புதிய புகைப்படம் ஒன்றை நாசா வெளியிட்டுள்ளது. சனிக்கோளில் விடியல் எப்படி இருக்கும் என்பதை இந்தப்புகைப்படம் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. மேலும், சனிக்கோளை சுற்றியிருக்கும் வளையங்களையும் கெசினி அழகாகப் படம்பிடித்துள்ளது. இருள் சூழ்ந்த சனிக்கோளைச்சுற்றி பனிப்படலம் போல அதன் வளையங்கள் புகைப்படத்தில் பதிவாகியுள்ளன. சனிக்கோளிலிருந்து சுமார் 6,20,000 மைல் தூரத்தில் இருந்து இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 31-ம் தேதியன்று எடுக்கப்பட்ட இந்தப்புகைப்படத்தை நாசா தற்போது வெளியிட்டுள்ளது.

சனிக்கோளுக்கும் வளையத்துக்கும் இடையே மொத்தம் 22 முறை டைவ் செய்யும் கெசினி விண்கலத்தின் பயணத்துக்கு 'கிராண்ட் ஃபைனல்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் பயணத்தைத் தொடங்குவதற்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படம்தான் தற்போது வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story