அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு


அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு
x
தினத்தந்தி 27 Jun 2017 11:30 PM GMT (Updated: 27 Jun 2017 7:44 PM GMT)

இந்தியாவாலும், ஐரோப்பிய யூனியனாலும் தடை செய்யப்பட்டுள்ள ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தின் தலைவன், சையத் சலாவுதீன்.

இஸ்லாமாபாத்,

இந்தியாவாலும், ஐரோப்பிய யூனியனாலும் தடை செய்யப்பட்டுள்ள ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தின் தலைவன், சையத் சலாவுதீன். இவரை சர்வதேச பயங்கரவாதி என அமெரிக்கா நேற்று முன்தினம் பிரகடனம் செய்தது.

இது பாகிஸ்தானுக்கு பெருத்த அடியாக அமைந்துள்ளது. எனவே அந்த நாடு, அமெரிக்காவின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதுபற்றி பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், ‘‘காஷ்மீர் மக்களின் சுய நிர்ணய உரிமைக்கு ஆதரவான தனி நபர்களை பயங்கரவாதிகள் என பிரகடனம் செய்வது முற்றிலும் நியாயம் இல்லை’’ என்று கூறி உள்ளார்.

மேலும், ‘‘அனைத்து வடிவத்திலான பயங்கரவாதத்தையும் எதிர்த்து போரிட பாகிஸ்தான் உறுதி கொண்டுள்ளது. இதை செயலிலும் காட்டி உள்ளது. பாகிஸ்தான் அரசும், மக்களும் இதற்காக மகத்தான தியாகங்கள் செய்துள்ளனர். அதை சர்வதேச சமுதாயம் அங்கீகரித்துள்ளது’’ என்றும் தெரிவித்து உள்ளார்.

அத்துடன், ‘‘சுய நிர்ணய உரிமைக்காக போராடும் காஷ்மீர் மக்கள், அதை அடைவதற்கு பாகிஸ்தான் தொடர்ந்து அரசியல், ராஜ்ய, தார்மீக ஆதரவை தொடர்ந்து வழங்கும்’’ என்றும் கூறி உள்ளார்.


Next Story