பூடான் எல்லையில் நாங்கள் அத்துமீறலில் ஈடுபடவில்லை சீனா மறுப்பு


பூடான் எல்லையில் நாங்கள் அத்துமீறலில் ஈடுபடவில்லை சீனா மறுப்பு
x
தினத்தந்தி 29 Jun 2017 9:04 AM GMT (Updated: 29 Jun 2017 9:04 AM GMT)

பூடான் எல்லையில் நாங்கள் அத்துமீறவில்லை என சீன ராணுவம் மறுத்து உள்ளது.



பெய்ஜிங்,


 சீனா - இந்தியா - பூடான் எல்லையின் மையப்பகுதியாக உள்ள டோக் லாம் பகுதியில் சீன ராணுவம் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து அடாவடியில் ஈடுபட்டு உள்ளது. இந்திய ராணுவத்தின் பதுங்குக்குழியை சீன ராணுவம் அழித்து உள்ளது, பதட்டமான சூழ்நிலை அங்கு நிலவி வருகிறது. சிக்கிம் செக்டாரில் எல்லையில் சீன ராணுவத்தின் செயல்பாடு இந்தியாவுடன் மோதல் போக்கை ஏற்படுத்தி உள்ளது. இந்திய பக்தர்கள் சீன எல்லையில் உள்ள மானசரோவர் கைலாய மலைக்கு புனித யாத்திரை செல்வதை சீன ராணுவம் தடுத்து உள்ளது. 

 எல்லையில் சீன ராணுவம் சாலை கட்டமைப்பு பணிகளை முன்னெடுப்பதற்கு பூடான் எதிர்ப்பை பதிவு செய்து உள்ளது. இந்திய ராணுவமும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. பூடான் ராணுவ நிலையை நோக்கி சீன ராணுவம் சாலையை அமைக்கிறது.

பூடான் எல்லையில் டோக்லாம் பகுதியில் சீன ராணுவம் தன்னுடைய பழைய நிலைக்கே திரும்பிவிட வேண்டும் என பூடான் எதிர்ப்பை தெரிவித்து உள்ளது. சோம்பில்ரி பகுதியில் பூடான் ராணுவ முகாமை நோக்கி சீன ஒருதலைப்பட்சமாக சாலையை அமைக்கிறது என இந்தியாவிற்கான பூடான் தூதர் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி வித்சோப் நாம்க்யால் தெரிவித்தார். பூடான் தன்னுடைய அதிகாரப்பூர்வ கண்டனத்தை பதிவு செய்து உள்ளநிலையில் நாங்கள் அத்துமீறவில்லை என சீனா கூறிஉள்ளது. 
 
பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சக செய்தி தொடர்பாளர், சீன ராணுவம் பூடான் எல்லைக்குள் அத்துமீறியது என்பதை நான் சரிசெய்ய விரும்புகிறேன். சீன எல்லைக்குள்தான் எங்களுடைய ராணுவம் செயல்படுகிறது என கூறிஉள்ளார். 

இந்திய ராணுவம்தான் சீன பகுதிக்குள் நுழைந்து உள்ளது என சீனா மீண்டும் குற்றம் சாட்டிஉள்ளது. அவர்கள் (இந்திய ராணுவம்) வழக்கமான நடவடிக்கைகளை தடுக்க முயற்சி செய்கிறார்கள். எங்களுடைய இறையாண்மை மற்றும் எல்லையை பாதுகாக்க எங்களுடைய ராணுவம் சரியான பதிலடியை கொடுக்கிறது. எங்களுடைய நிலையை நாங்கள் தெளிவாக கூறிவிட்டோம், இந்தியாதான் அதனுடைய தவறை திருத்திக் கொள்ள வேண்டும். எங்களுடைய எல்லையில் இருந்து ராணுவத்தை திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும் என சீனா கூறிஉள்ளது.

Next Story