பதவி இறக்கபட்ட சவுதி இளவரசர் முகமது பின் நயேப் சிறைவைக்கபட்டுள்ளாரா?


பதவி இறக்கபட்ட சவுதி இளவரசர் முகமது பின் நயேப் சிறைவைக்கபட்டுள்ளாரா?
x
தினத்தந்தி 29 Jun 2017 11:18 AM GMT (Updated: 2017-06-29T16:48:28+05:30)

பதவி இறக்கபட்ட சவுதி இளவரசர் முகமது பின் நயேப் சிறைவைக்கபட்டுள்ள நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.


எண்ணெய் வளமிக்க சவுதி அரேபியாவில் மன்னராக இருந்து வந்தவர் அப்துல்லா பின் அப்துல் அஜிஸ். இவர் 2015–ம் ஆண்டு, ஜனவரி 23–ந் தேதி மரணம் அடைந்தார். அதைத் தொடர்ந்து, அவரது ஒன்றுவிட்ட சகோதரர் சல்மான் மன்னர் ஆனார்.

சல்மான் மன்னர் ஆனதைத் தொடர்ந்து, இளவரசர் முகமது பின் நயேப்பை பட்டத்து இளவரசராகவும், இளவரசர் முகமது பின் சல்மானை பட்டத்து துணை இளவரசராகவும் நியமித்தார்.

இந்த நிலையில் அதிரடி திருப்பமாக, தனது மகனும், பட்டத்து துணை இளவரசருமான முகமது பின் சல்மானை (வயது 31), பட்டத்து இளவரசராக நியமித்து மன்னர் சல்மான் உத்தரவிட்டார்.

பட்டத்து இளவரசராக நியமிக்கப்பட்டுள்ள முகமது பின் சல்மான், நாட்டின் துணைப்பிரதமராகவும் இருப்பார். அவர் தொடர்ந்து ராணுவம், எண்ணெய் உள்ளிட்ட துறைகளின் பொறுப்பையும் கவனிப்பார்.

தன்னிடம் இருந்த பட்டத்து இளவரசர் பதவியைப் பறித்து, முகமது பின் சல்மானுக்கு கொடுத்துள்ள போதிலும், அவருக்கு தனது ஆதரவையும், விசுவாசத்தையும் முகமது பின் நயேப் தெரிவித்தார்.

அவருக்கு பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் பதில் அளித்தபோது, ‘‘உங்களின் வழிகாட்டுதலையும், அறிவுரையையும் பெறாமல் விட்டு விட மாட்டோம்’’ என குறிப்பிட்டார்.

இந்த நிலையில்  முகமது பின் நயேப், தனது அரண்மனையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் நியூயார்க் டைம்ஸ்  செய்தி வெளியிட்டுள்ளது. இதை சவுதி அரேபிய அதிகாரி ஒருவர் மறுத்தார். இது 100 சதவீதம் தவறான தகவல் என அவர் தெரிவித்தார்.

Next Story