பனாமா மோசடி குற்றச்சாட்டு: பதவி விலக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் மறுப்பு


பனாமா மோசடி குற்றச்சாட்டு: பதவி விலக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் மறுப்பு
x
தினத்தந்தி 13 July 2017 10:30 AM GMT (Updated: 2017-07-13T16:00:32+05:30)

பனாமா மோசடி தொடர்பாக பதவி விலக வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்க பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் மறுப்பு தெரிவித்து உள்ளார்.

இஸ்லமாபாத், 

பனாமா கேட் மோசடி தொடர்பாக ஊழல் வழக்கை நவாஸ் ஷெரிப்புக்கு எதிராக பதிவு செய்ய வேண்டும் என்று  கூட்டு விசாரணைக்குழு பரிந்துரை அளித்ததையடுத்து, நவாஸ் ஷெரீப் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. இந்த நிலையில், நான் பதவி விலக மாட்டேன் என்று நவாஸ் ஷெரிப் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார். 

அமைச்சரவை கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்  கூறுகையில், “ கூட்டு விசாரணை குழு அறிக்கையானது மோசடியானது மற்றும் ஊகத்தின் அடிப்படையிலானது” என்று தெரிவித்துள்ளார். 

எதிர்க்கட்சிகள் ராஜினாமா செய்ய வேண்டும் கோரிக்கை விடுத்து வருவது பற்றி கருத்து தெரிவித்த நவாஸ் ஷெரீப், பாகிஸ்தான் மக்கள்தான் என்னை தேர்வு செய்தனர். எனவே என்னை பிரதமர் பதவியில் இருந்து நீக்க அவர்களால் மட்டுமே முடியும். அரசியலில் நுழைந்த பிறகு எனது குடும்பம் எதையும் சம்பாதிக்கவில்லை. அதிக இழப்புகளையே சந்தித்து இருக்கிறது. கூட்டுக்குழு அறிக்கையில் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள் கெட்ட நோக்குடன் வெளியானவை என்பதை கட்டுகிறது. தவறான மற்றும் தேவையற்ற முறையில் என்னை பதவி விலக வேண்டும் என்று கோருபவர்கள் தங்களை ஒருமுறை சுயபரிசோதனை செய்து கொள்ளட்டும்’ என்றார். 

பதவி விலக கோரிக்கை ஏன்?

பனாமா நாட்டில் உள்ள புகழ்பெற்ற, 'மொசாக் பொன்சேகா' சட்ட நிறுவனத்தின் உதவியுடன், பல்வேறு நாடுகளின் முக்கிய பிரமுகர்கள், வெளிநாடுகளில் சட்ட விரோதமாக முதலீடு செய்துள்ளனர். இதுதொடர்பான ஆவணங்கள், பனாமா பேப்பர்ஸ் என்ற பெயரில் கடந்த ஆண்டு வெளியானது. அந்த பட்டியலில் நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது குடும்பத்தாரின் பெயரும் இடம் பெற்றிருந்ததால் சிறப்பு கூட்டு புலனாய்வு குழு விசாரணைக்கு அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

இதுதொடர்பாக, பாகிஸ்தான் மத்திய புலனாய்வு அமைப்பான எப்.ஐ.ஏ.யின் கூடுதல் தலைமை இயக்குனர் வாஜித் ஜியா தலைமையில் 6 உறுப்பினர்களைக் கொண்ட கூட்டு புலனாய்வுக்குழு கடந்த இரண்டு மாதமாக நடத்திய விசாரணை அறிக்கை கடந்த 10 ஆம் தேதி  பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையில் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகன்கள், மகள் மீது  ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து பாகிஸ்தானில் உள்ள அனைத்து பிரதான கட்சிகளும் நவாஸ் ஷெரீப் தன் மீதான குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுபடும்  வரை அதிகாரத்தில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


Next Story