பழிக்கு பழி கற்பழிப்பு; தானாக முன்வந்து விசாரிக்கிறார் பாகிஸ்தான் தலைமை நீதிபதி


பழிக்கு பழி கற்பழிப்பு; தானாக முன்வந்து விசாரிக்கிறார் பாகிஸ்தான் தலைமை நீதிபதி
x
தினத்தந்தி 27 July 2017 3:45 PM GMT (Updated: 27 July 2017 3:44 PM GMT)

பாகிஸ்தானில் பஞ்சாயத்து உத்தரவின்படி டீன் ஏஜ் சிறுமி தனது குடும்பத்தினர் முன் கற்பழிக்கப்பட்ட வழக்கினை தலைமை நீதிபதி தானாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துள்ளார்.

லாஹூர்,

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் முஜாபராபாத் நகரில் அமைந்துள்ள கிராமம் ராஜ்பூர். இங்கு வசித்து வருபவர் உமர் வாடா. இவர் கடந்த 16ந்தேதி அஷ்பக் என்பவரின் டீன் ஏஜ் வயது நிறைந்த சகோதரியை கற்பழித்துள்ளார்.

இந்த வழக்கு கிராம பஞ்சாயத்திற்கு சென்றுள்ளது. அவர்கள் உமரின் சகோதரியை அஷ்பக் கற்பழிக்க உத்தரவு பிறப்பித்துள்ளனர். இந்த முடிவுக்கு உமரின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஆனால், குற்றவாளியின் சகோதரிக்கு இதேபோன்று நடந்தால் தான் நீதியாகும் என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த சம்பவம் பற்றி கடந்த திங்கட்கிழமை உமர் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். போலீசார், கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள் 30 பேர், அஷ்பக் மற்றும் உமர் மீது தனித்தனியாக எப்.ஐ.ஆர். பதிவு செய்தனர்.

கற்பழிப்பு உத்தரவு பிறப்பித்த கிராம பஞ்சாயத்து தலைவர் உள்பட 20 பேர் இதுவரை கைது செய்யப்பட்டு உள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில், உமரின் தாயாரான கனீஜ் மாய், தனது மகன் பாதிக்கப்பட்ட சிறுமியை மணம் முடிக்க தயாராக இருக்கிறார் என தெரிவித்துள்ளார். ஆனால் அதனை கிராம பஞ்சாயத்து ஏற்கவில்லை என தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் இளைய சகோதரர் மற்றும் பஞ்சாப் முதல் மந்திரியான ஷெரீப், ராஜ்பூர் கிராமத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட 2 சிறுமிகளையும் சந்தித்து அவர்களிடம் உரிய நீதி கிடைக்கும் என உறுதியளித்துள்ளார்.

முதல் சிறுமி பாதிக்கப்பட்ட உடனேயே போலீசார் குற்றவாளி மீது நடவடிக்கை எடுத்திருந்தால் 2வது சிறுமிக்கு இந்த கொடுமை நேர்ந்திருக்காது என கூறிய ஷெரீப், அனைத்து காவல் அதிகாரிகளையும் பணிநீக்கம் செய்துள்ளார்.

பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மியான் சாகிப் நிசார் இதுபற்றி அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கும்படி பஞ்சாப் ஐ.ஜி.க்கு உத்தரவிட்டுள்ளார். அவர் தானாக முன்வந்து இந்த வழக்கின் விசாரணையை மேற்கொள்கிறார்.


Next Story