அமெரிக்க செனட் சபையில் ‘ஒபாமா கேர்’ காப்பீட்டு திட்டத்தை ரத்து செய்யும் மசோதா தோல்வி


அமெரிக்க செனட் சபையில் ‘ஒபாமா கேர்’ காப்பீட்டு திட்டத்தை ரத்து செய்யும் மசோதா தோல்வி
x
தினத்தந்தி 27 July 2017 11:15 PM GMT (Updated: 27 July 2017 8:19 PM GMT)

அமெரிக்க செனட் சபையில் குடியரசு கட்சி எம்.பி.க்களே போர்க்கொடி தூக்கியதால், ‘ஒபாமா கேர்’ காப்பீட்டு திட்டத்தை ரத்து செய்யும் மசோதா தோல்வி அடைந்தது.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் ஒபாமா அதிபர் பதவி வகித்தபோது, ஏழை எளிய மக்களும் மருத்துவ காப்பீடு செய்துகொள்ள வசதியாக குறைந்த பிரிமியத்தில் ‘ஒபாமா கேர்’ என்ற பெயரில் ஒரு காப்பீட்டு திட்டத்தை கொண்டுவந்தார். இதற்கான மசோதாவில் அவர் 2010–ம் ஆண்டு மார்ச் மாதம் 23–ந் தேதி கையெழுத்து போட்டார்.

இந்த காப்பீட்டு திட்டம் சாமானிய மக்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. 2 கோடி அமெரிக்கர்கள் இந்த திட்டத்தால் பலன் அடைந்து வருகின்றனர்.

ஆனால் அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதியான டொனால்டு டிரம்புக்கு இந்த காப்பீட்டு திட்டம் பிடிக்கவில்லை. அதற்கு பெருமளவு நிதி வீணாவதாக நினைக்கிறார்.

எனவேதான் அவர் கடந்த ஜனவரி மாதம் 20–ந் தேதி பதவி ஏற்ற பிறகு போட்ட முதல் நிர்வாக உத்தரவே, ஒபாமாவின் கனவுத்திட்டத்தை கலைக்கிற விதத்தில் ‘ஒபாமா கேர்’ திட்டத்தை ரத்து செய்வதற்கான நடவடிக்கை எடுப்பதற்குரியதாகும்.

இந்த நிலையில் ‘ஒபாமா கேர்’ காப்பீட்டு திட்டத்தை ரத்து செய்யவும், இதற்கான மாற்று திட்டத்தை இரண்டு ஆண்டுகளில் கொண்டுவரவும் வகை செய்யும் மசோதா அமெரிக்காவில் டிரம்பின் குடியரசு கட்சிக்கு மெஜாரிட்டி பலம் உள்ள பாராளுமன்ற செனட் சபையில் தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த ஓட்டெடுப்பில் இந்த மசோதா மீது விவாதம் நடத்துவதற்கு செனட் சபை ஒப்புதல் அளித்தது. அதன்பேரில் விவாதம் நடந்தது.

அதன் முடிவில் நேற்று முன்தினம் மாலை ஓட்டெடுப்பு நடந்தது. இந்த ஓட்டெடுப்பில், 100 பேரை கொண்ட செனட் சபையில் மசோதாவுக்கு ஆதரவாக 45 ஓட்டுகள் விழுந்தன. ஆனால் எதிராக 55 ஓட்டுகள் கிடைத்தன. இதையடுத்து மசோதா தோற்றுப் போனது.

இது டிரம்புக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. ‘ஒபாமா கேர்’ திட்டத்துக்கு முடிவு கட்ட வேண்டும் என்ற அவரது கனவு, இன்னும் நிறைவேறாமல் போய்க் கொண்டிருக்கிறது.

இந்த மசோதா இப்படி 10 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியதில் டிரம்பின் குடியரசு கட்சி எம்.பி.க்களுக்கே முக்கிய பங்கு இருக்கிறது.

மூத்த எம்.பி., ஜான் மெக்கைன் உள்ளிட்ட 7 பேர் மசோதாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி, ‘ஒபாமா கேர்’ திட்டத்தை ரத்து செய்யும் முடிவை நிராகரித்து ஓட்டு போட்டனர்.

ஓஹியோ மாகாண எம்.பி., ராப் போர்ட்மேன் கருத்து தெரிவிக்கையில், ‘‘நான் ஒபாமா கேர் திட்டத்தை ரத்து செய்யவும், மாற்று திட்டம் கொண்டு வரவும் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறேன். இவ்விரண்டு வி‌ஷயத்திலும் நான் விட்டுக் கொடுக்க மாட்டேன்’’ என கூறினார்.

மேலும் அவர் கூறும்போது, ‘‘ஒபாமா கேர் திட்டத்துக்கு மாற்றாக நாம் மற்றொரு சிறப்பான மசோதாவை கொண்டுவர வேண்டிய அவசியம் எழுந்துள்ளது’’ என்று குறிப்பிட்டார்.

மசோதா தோல்வி கண்டிருப்பது பற்றி மெஜாரிட்டி தலைவர் மிட்ச் மெக்கன்னல் கருத்து தெரிவிக்கையில், ‘‘இந்த மசோதா தோல்வி கண்டுள்ளது. இருந்த போதும், எம்.பி.க்கள் சொன்ன சுகாதார காப்பீடு சீர்திருத்த யோசனைகள் பல, மசோதாவில் இடம் பெற்றிருந்தன’’ என்று கூறினார்.


Next Story