‘சுஷ்மா சுவராஜ் எங்களுக்கு பிரதமராக இருந்திருக்க வேண்டும்’ பாகிஸ்தான் பெண் உருக்கம்!


‘சுஷ்மா சுவராஜ் எங்களுக்கு பிரதமராக இருந்திருக்க வேண்டும்’ பாகிஸ்தான் பெண் உருக்கம்!
x
தினத்தந்தி 28 July 2017 9:38 AM GMT (Updated: 2017-07-28T15:08:41+05:30)

பாகிஸ்தானில் இருந்து எழுந்து உள்ள கோரிக்கையானது நவாஸ் செரீப்பிற்கு மகிழ்ச்சி அளித்து இருக்காது.

இஸ்லாமாபாத்/புதுடெல்லி,

இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் சமூக வலைதளங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். வெளிநாட்டில் சிக்கி தவிக்கும் இந்தியர்களாக இருக்கட்டும், இந்தியாவிற்கு சிகிச்சைபெற வரும் பாகிஸ்தானியர்களாக இருக்கட்டும் மிகவும் கனிவோடு, சிறப்பாக செயல்பட்டு அவர்களுடைய குறைகளை தீர்த்து வைப்பதை தலையாய பணியாக கொண்டு செயல்பட்டு வருகிறார் சுஷ்மா சுவராஜ். பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு சிகிச்சைக்காக வருவோரது எண்ணிக்கையானது அதிகரித்துக் கொண்டு செல்கிறது. இதில் சுஷ்மாவின் பங்கு மகத்தானது. மருத்துவ உதவிக்காக வருபவர்களுக்கு விசா உடனடியாக கிடைக்க உடனடி நடவடிக்கையை எடுத்து வருகிறார் சுஷ்மா. 

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு வந்து சிகிச்சை பெறுபவர்களது எண்ணிக்கையானது மாதம் 500 ஆக உள்ளது.
 
இந்நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த ஹிஜாப் ஆசிஃப் என்ற பெண், சுஷ்மாவிற்கு டுவிட்டரில் தொடர்ச்சியான கோரிக்கையை விடுத்தார். அதில், அம்மா நோயாளி இப்போது ஐசியு-வில் உள்ளார். அவருக்கு உடனடியாக கல்லீரல் மாற்று சிகிச்சை செய்யப்பட வேண்டும். விசாவிற்கு விண்ணப்பித்து இரண்டு மாதங்களாக காத்திருக்கிறோம். தயவுசெய்து எங்களுக்கு உதவுங்கள் அம்மா. பாகிஸ்தானில் உள்ள எந்த மருத்துவரும் சிகிச்சை அளிக்க தயாராக இல்லை. நீங்கள் உதவி செய்ய வேண்டும் என நான் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்.

 அன்புக்குரிய அம்மா, நோயாளியின் இப்போதைய நிலைக்குறித்து இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்திடம் தெரிவித்து உள்ளோம், இனி அனைத்தும் உங்கள் கையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு விட்டது. நீங்கள் அனுமதி அளித்தால் எங்களுக்கு விசா கிடைக்கும். மேடம், இவ்விவகாரத்தை கவனத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். தேவையான மருத்துவ அறிக்கைகளை அளிக்க தயாராக உள்ளோம். இந்திய தூதரகத்திடம் சமர்பிக்க வேண்டிய ஆவணங்களை சமர்பிக்க தயாராக உள்ளோம். உங்களுடைய உதவியானது உடனடியாக தேவைப்படுகிறது, நோயாளியின் நிலையானது மோசமாக உள்ளது, என்று கோரிக்கை விடுத்தார் ஹிஜாப் ஆசிஃப்.

இதைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரான கெளதம் பம்பாவாலேவை தொடர்பு கொண்ட சுஷ்மா, அந்த பெண்ணிற்கு உடனடியாக விசாவை தெளிவு செய்யுமாறு உத்தரவிட்டார். இந்திய தூதரகமும் இவ்விவகாரத்தை கையில் எடுத்தது.

இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மாவின் உடனடி நடவடிக்கை மற்றும் இந்திய தூதரகத்தின் துரிதமான செயல்பாட்டினால் பூரித்துப்போன ஹிஜாப் ஆசிஃப், சுஷ்மா சுவராஜ் எங்களுக்கு பிரதமராக இருந்திருக்க வேண்டும், நாடு மாற்றம் கண்டிருக்கும் என டுவிட்டரில் உருக்கமாக தெரிவித்து உள்ளார். 

சுஷ்மாவிற்கு நன்றி தெரிவித்து ஹிஜாப் ஆசிஃப் பதிவிட்டு உள்ள டுவிட்டர் செய்திகளில், இங்கே என் மீது அளப்பறியா அன்பு செலுத்தப்படுகிறது. நீங்கள் (சுஷ்மா சுவராஜ்)எங்கள் நாட்டின் பிரதமராக இருந்திருந்தால், எங்கள் நாடு மாறியிருக்கும்!. இதயம் உங்களுக்காக துடிக்கிறது. சுஷ்மா அம்மா உங்களை நான் எப்படி அழைப்பது சூப்பர்பெண்? கடவுள்? உங்களுடைய உயர் பண்பை பாராட்ட வார்த்தைகளே கிடையாது. லவ் யூ மேடம், கண்ணீர் வழியும் நிலையில் உங்களை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. சுஷ்மா சுவராஜைப் போன்ற பெண்ணை இதுவரை நான் பார்த்தது கிடையாது. 

இருநாடுகளுக்கு இடையே பிரச்சனைகள் இருந்தாலும் அவர் மகத்தான பணியை செய்வதை தவிர்த்தது கிடையாது. நீங்கள் நீண்ட நாள் வாழ வேண்டும் மேடம். சுஷ்மா சுவராஜை போன்று எங்கள் நாட்டில் பணியாற்ற யாரும் கிடையாது. சர்தாஜ் அஜிஸ் இருக்கிறாரா? இல்லையா? என்பது கூட யாருக்கும் தெரியாது என குறிப்பிட்டு உள்ளார். ஹிஜாப் ஆசிஃப் டுவிட்களுக்கு பதிலளித்து உள்ள இந்தியர்கள் எங்களுடைய உதவி எப்போதும் இருக்கும் என குறிப்பிட்டு உள்ளனர். அதான் நவாஸ் செரீப்பை நீக்கியாற்றி, நீங்கள் சுஷ்மாவை பிரதமர் ஆக்கலாம் எனவும் டுவிட்டரில் தகவல்கள் வெளியிடப்பட்டு வருகிறது.


Next Story