விடுதலைப்புலிகளின் சொத்துகள் மீதான தடை தொடரும் ஐரோப்பிய யூனியன் அறிவிப்பு


விடுதலைப்புலிகளின் சொத்துகள் மீதான தடை தொடரும் ஐரோப்பிய யூனியன் அறிவிப்பு
x
தினத்தந்தி 28 July 2017 11:00 PM GMT (Updated: 2017-07-29T01:32:10+05:30)

விடுதலைப்புலிகள் அமைப்பை பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்து நீக்கினாலும், அந்த இயக்கத்தின் சொத்துகள் மீதான தடை தொடரும் என ஐரோப்பிய யூனியன் அறிவித்து உள்ளது.

கொழும்பு,

இலங்கையில் தனி நாடு கேட்டு போராடி வந்த விடுதலைப்புலிகள் அமைப்பை, பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் சேர்த்து கடந்த 2006–ம் ஆண்டு ஐரோப்பிய யூனியன் தடை விதித்தது. அத்துடன் ஐரோப்பிய நாடுகளில் உள்ள இந்த இயக்கத்தின் சொத்துகளும் முடக்கப்பட்டன.

ஐரோப்பிய யூனியனின் இந்த நடவடிக்கையை எதிர்த்து விடுதலைப்புலிகள் இயக்கம் சார்பில் லக்சம்பர்க் நகரில் உள்ள ஐரோப்பிய யூனியன் கோர்ட்டில் (நீதிக்கான ஐரோப்பிய கோர்ட்டு) வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வந்த கோர்ட்டு, விடுதலைப்புலிகள் இயக்கத்தை பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்து நீக்கி கடந்த 26–ந் தேதி தீர்ப்பளித்தது.

இது உலகமெங்கும் வாழும் தமிழர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக இந்த தீர்ப்பின் அடிப்படையில் இந்தியாவிலும் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என தமிழகத்தில் கோரிக்கைகள் எழுந்தன.

இந்த நிலையில் விடுதலைப்புலிகள் அமைப்பை பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்து நீக்கினாலும், அந்த இயக்கத்தின் சொத்துகள் மீதான தடை (முடக்கம்) தொடரும் என ஐரோப்பிய யூனியன் அறிவித்து உள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

ஐரோப்பிய கோர்ட்டு கடந்த 26–ந் தேதி பிறப்பித்த உத்தரவில், 2009–ம் ஆண்டு நடந்த இலங்கை இறுதிகட்ட போரில் விடுதலைப்புலிகள் தோல்வியடைந்த பின்னரும், இலங்கையில் தொடர்ந்து பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபடுவதற்கான நோக்கம் அந்த அமைப்புக்கு இருப்பதாக நம்புவதை ஐரோப்பிய யூனியன் விளக்க தவறிவிட்டதாக கூறியுள்ளது.

எனவே 2011 முதல் 2015 வரையிலான விடுதலைப்புலிகள் இயக்கத்தின் சொத்துகளை முடக்குவதை ரத்து செய்வதை உறுதிப்படுத்துவதாக கோர்ட்டு கூறியுள்ளது. இதனால் அந்த உத்தரவு அந்த குறிப்பிட்ட காலத்துக்கு (2011–2015) மட்டுமே பொருந்தும்.

இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி வரும் காலங்களில் வழக்கு தொடரப்பட்டால் அது கருத்தில் கொள்ளப்படும். தற்போதைய நிலையில், விடுதலைப்புலிகள் பயங்கரவாத அமைப்பு என ஐரோப்பிய யூனியனால் வகைப்படுத்தப்பட்டு இருக்கும் நடவடிக்கை தொடர்வதுடன், அந்த இயக்கத்தின் சொத்துகள் முடக்கம் போன்ற கட்டுப்பாடுகள் அனைத்தும் தொடரும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


Next Story