சீன அதிபருடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சந்திப்பு


சீன அதிபருடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சந்திப்பு
x
தினத்தந்தி 28 July 2017 11:30 PM GMT (Updated: 2017-07-29T01:37:55+05:30)

பிரிக்ஸ் அமைப்பில் உள்ள நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களின் 2 நாள் கூட்டம் பீஜிங் நகரில் நடந்தது.

பீஜிங்

பிரிக்ஸ் அமைப்பில் உள்ள பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களின் 2 நாள் கூட்டம் பீஜிங் நகரில் நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சீனா சென்றிருந்தார்.

2–வது நாளான நேற்று சீன அதிபர் ஷின்பிங்கை, பிரிக்ஸ் நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் சந்தித்து பேசினர். அப்போது, பரஸ்பர நம்பிக்கையை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வது, புவியியல் ரீதியாக வெகுதொலைவில் இருந்தாலும் 5 நாடுகளும் ஒத்துழைத்து செயல்படுவதில் ஆர்வம் காட்டுவது குறித்து ஷின்பிங் பாராட்டினார்.

அவர் கூறுகையில், ‘‘நீங்கள் ஒவ்வொரும் பரஸ்பர நம்பிக்கை மற்றும் பாதுகாப்பில் இணைந்து செயல்படுவதில் மிக நன்றாக செயல்பட்டு வருகின்றனர். உங்களின் இந்த முயற்சிகளை பாராட்டுகிறேன்’’ என்றார்.

சீனாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் யாங் ஜைச்சி பேசும்போது, ‘‘அனைத்து பிரிக்ஸ் நாடுகளும், முக்கியமான உலகளாவிய மற்றும் பிராந்திய விவகாரங்களில் இணைந்து செயல்படுவதை பலப்படுத்தவேண்டும்’’ என்று குறிப்பிட்டார்.

நேற்றைய கூட்டத்தில் சீன அதிகாரிகள் யாரும், ஊடகங்களின் முன்பாக பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு ஆலோசகர்களுடன் கைகுலுக்கி கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story