எதிர்க்கட்சிகள் புறக்கணித்த வெனிசூலா தேர்தலில் வன்முறை


எதிர்க்கட்சிகள் புறக்கணித்த வெனிசூலா தேர்தலில் வன்முறை
x
தினத்தந்தி 30 July 2017 11:15 PM GMT (Updated: 2017-07-31T01:15:38+05:30)

தென் அமெரிக்க நாடான வெனிசூலா, எண்ணெய் வளமிக்க நாடு. ஆனால் அங்கு கடந்த சில மாதங்களாக அரசியல் நிலையற்ற தன்மை உள்ளது.

கராக்கஸ்,

தென் அமெரிக்க நாடான வெனிசூலா, எண்ணெய் வளமிக்க நாடு. ஆனால் அங்கு கடந்த சில மாதங்களாக அரசியல் நிலையற்ற தன்மை உள்ளது. விலைவாசி ஏற்றம் கண்டுள்ளது. பண வீக்கம் நிலவுகிறது. அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக அதிபர் நிக்கோலஸ் மதுரோவுக்கு எதிராக போராட்டங்கள் நடந்த வண்ணமாக உள்ளன. இவற்றில் இதுவரை 100-க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள்.

இந்த நிலையில் அந்த நாட்டில் புதிய அரசியல் சட்டம் இயற்றும் அதிகாரத்தை கொண்டுள்ள அரசியல் நிர்ணய சபைக்கு நேற்று தேர்தல் நடந்தது.

இந்த தேர்தலை எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. ஆனால் அரசியல் நிர்ணய சபை ஒன்றுதான், நாட்டில் அமைதியைக் கொண்டு வரும் என அரசாங்கம் கூறுகிறது.

தேர்தலையொட்டி நேற்று முன்தினமே அங்கு வன்முறை தலைவிரித்தாடத் தொடங்கி விட்டது. தலைநகரான கராக்கஸ்சில் சாலைகளில் போராட்டக்காரர்கள் தடைகளை ஏற்படுத்தினர்.

டி.வி.யில் தோன்றிப் பேசிய அதிபர் நிக்கோலஸ் மதுரோ, “இந்த தேர்தலில் அரசுக்கு பெரும் வெற்றி கிடைக்கும், இந்த நாட்டின் அரசியல் அமைப்பில் இந்த தேர்தல் மிக முக்கியமானது” என்று குறிப்பிட்டார்.

ஆங்காங்கே மக்கள் ஆர்வமுடன் வாக்களித்தாலும்கூட பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன.

இது குறித்து தேர்தல் கவுன்சில் தலைவர் திபிசே லூசெனா கூறும்போது, “சில ஓட்டு எந்திரங்கள் நொறுக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் ஓட்டு எந்திரங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளன” என்று கூறினார்.

Next Story