ஹார்வே சூறாவளியால் ஆயிரக்கணக்கானோர் கடும் பாதிப்பு; 2 பேர் பலி


ஹார்வே சூறாவளியால் ஆயிரக்கணக்கானோர் கடும் பாதிப்பு; 2 பேர் பலி
x
தினத்தந்தி 27 Aug 2017 10:58 AM GMT (Updated: 27 Aug 2017 10:57 AM GMT)

அமெரிக்காவை தாக்கி வரும் ஹார்வே சூறாவளியால் ஆயிரக்கணக்கானோர் கடும் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். இதுவரை 2 பேர் இதற்கு பலியாகியுள்ளனர்.

ஹூஸ்டன்,

அமெரிக்காவில் கடந்த 12 வருடங்களில் இல்லாத வகையில் ஹார்வே சூறாவளி அழிவை உண்டாக்கியுள்ளது.  கல்ஃப் கோஸ்ட் பகுதியில் வலுவிழப்பதற்கு முன் சூறாவளிக்கு 2 பேர் பலியாகி உள்ளனர்.  14 பேர் காயமடைந்துள்ளனர்.

அந்நாட்டில் எண்ணெய் மற்றும் வாயு தொழிற்சாலைகளின் மையம் என கூறப்படும் டெக்சாஸ் மாகாணம் முழுவதும் இதன் தாக்கம் உள்ளது.

கடந்த 1961ம் ஆண்டு முதல் இதுவரை இல்லாத வகையில் மிக வலிமையான சூறாவளியாக ஹார்வே உள்ளது.  டெக்சாசில் இன்று காலை முதல் பெய்து வரும் கனமழையினால் ஹூஸ்டன் நகரில் அரை அடிக்கும் கூடுதலாக மழை நீர் திரண்டு வெள்ள பெருக்கை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து மழை பொழிவு இருக்கும் என்றும் அதனால் வெள்ள பெருக்கு ஏற்படும் ஆபத்து உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனால் சூறாவளி கடந்து செல்லும் பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பு நிறைந்த பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து சென்றுள்ளனர்.

டெக்சாசில் உள்ள வீடுகள் பெயர்ந்து பறந்து போகும் அளவுக்கு ஹார்வே சூறாவளியின் வேகம் உள்ளது.  இதனால் மின் கம்பங்கள் சாய்ந்தன.  ஆயிரக்கணக்கான மக்கள் மின் இணைப்பு இன்றி உள்ளனர்.  மரங்கள் முறிந்து வீடுகளின் மீது விழுந்துள்ளன.  சாலைகளில் இருந்த பெயர் பலகைகள் காற்றின் வேகத்தில் அடித்து செல்லப்பட்டு உள்ளன.

அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பொறுப்பேற்ற பின்பு சந்திக்கும் பெரிய அளவிலான தேசிய பேரிடராக இது கருதப்படுகிறது.  

டெக்சாஸ் ஆளுநர் கிரேக் அப்போட், நாடு முழுவதும் ராணுவத்திலுள்ள 1,800 உறுப்பினர்கள் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.  அதேவேளையில், ஆயிரம் பேர் வரை தேடுதல் மற்றும் மீட்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று கூறியுள்ளார்.

Next Story