பாகிஸ்தானில் அமெரிக்காவின் கொடி, டொனால்டு டிரம்ப் உருவ பொம்மை எரிப்பு


பாகிஸ்தானில் அமெரிக்காவின் கொடி, டொனால்டு டிரம்ப் உருவ பொம்மை எரிப்பு
x
தினத்தந்தி 27 Aug 2017 2:43 PM GMT (Updated: 27 Aug 2017 2:43 PM GMT)

பாகிஸ்தானில் அமெரிக்காவின் கொடி மற்றும் டொனால்டு டிரம்பின் உருவை பொம்மை எரிக்கப்பட்டு உள்ளது.


லாகூர்,


அமெரிக்காவில் டொனால்டு டிரம்ப் ஆட்சிக்கு வந்தபின்னர் பயங்கரவாத விவகாரத்தில் பாகிஸ்தான் மீதான பிடியை இறுக்கி வருகிறது.

பாகிஸ்தானுக்கான நிதியை நிறுத்தி வைத்து உள்ள அமெரிக்கா பயங்கரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தானுக்குள் அமெரிக்கா வான்வழி தாக்குதலை தொடங்கும் எனவும் மிரட்டல் விடுத்து உள்ளது. டொனால்டு டிரம்ப் பயங்கரவாதிகளுக்கு இனியும் புகலிடம் தந்து கொண்டிருந்தால், அமைதியாக பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம் என்று பாகிஸ்தானுக்கு நேரடியாக எச்சரிக்கை விடுத்து உள்ளார். அமெரிக்காவின் அடுத்தடுத்த மிரட்டலுக்கு பாகிஸ்தான் ராணுவம், அமெரிக்காவிடம் இருந்து பொருள் மற்றும் நிதி உதவியை நாடவில்லை, அமெரிக்கா நம்பிக்கையுடனும், மரியாதையுடன் எங்களை நடத்த வேண்டும் என்றது.

அமெரிக்காவின் நகர்வுக்கு பாகிஸ்தானில் பல்வேறு தரப்பில் எதிர்ப்பு எழுந்து உள்ளது. பாகிஸ்தான் அரசுக்கும் எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்து உள்ளது. முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப்பின் சகோதரரும், பஞ்சாப் மாகாண முதல்-மந்திரியுமான ஷாபாஸ் செரீப் அமெரிக்க உதவிகளுக்கு பாகிஸ்தான் விடை கொடுக்கும் நேரம் வந்துவிட்டது என கூறிஉள்ளார். இதற்கிடையே ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதத்திற்கு எதிராக போரிடும் அமெரிக்க படையின் ஜெனரல் ஜான் நிகோல்சான், பாகிஸ்தானின் பெஷாவர் மற்றும் குயிட்டாவில் ஆப்கானிஸ்தான் தலிபான்கள் நிலைக்கொண்டு உள்ளது எங்களுக்கு தெரியும் என கூறிஉள்ளார். 

ஏற்கனவே பாகிஸ்தானிலும் தாக்குதல் நடத்துவோம் என அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை விடுத்து உள்ளநிலையில் அந்நாட்டு ராணுவ அதிகாரி இவ்வாறு கூறிஉள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இதற்கிடையே அமெரிக்காவிற்கு எதிரான போராட்டங்களும் பாகிஸ்தானில் நடந்து வருகிறது. லாகூரில் அமெரிக்காவிற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் அமெரிக்காவின் தேசியக் கொடிகள், டொனால்டு டிரம்பின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. அவர்கள் அமெரிக்காவிற்கு எதிரான கோஷங்களை எழுப்பினர், டொனால்டு டிரம்ப் உருவ பொம்மையை செருப்பாலும் அடித்து எதிர்ப்பை தெரிவித்து உள்ளனர். அமெரிக்காவின் குற்றச்சாட்டை பாகிஸ்தானின் அனைத்து தரப்பும் மறுத்து உள்ளது.


Next Story