இந்தியாவுக்கு உதவ அமெரிக்கா தயார் அதிகாரிகள் உறுதி


இந்தியாவுக்கு உதவ அமெரிக்கா தயார் அதிகாரிகள் உறுதி
x
தினத்தந்தி 27 Aug 2017 11:15 PM GMT (Updated: 2017-08-28T02:23:06+05:30)

சீனாவுடன் எல்லை பிரச்சினையில் இந்தியாவுக்கு உதவ அமெரிக்கா தயாரராக இருப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்து உள்ளனர்.

வாஷிங்டன்,

சிக்கிம் மாநில எல்லையில் உள்ள டோக்லாம் பகுதி தொடர்பான பிரச்சினை இந்தியா–சீனா இடையே கடந்த 2 மாதமாக நிலவி வருகிறது. இது குறித்து அமெரிக்க வெள்ளை மாளிகை அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது:–

இந்தியா–சீனா இடையேயான எல்லை பிரச்சினை தொடர்ந்து நீடித்து வருவது கவலை அளிக்கிறது. இதன் மூலம் பூடான் நாட்டின் இறையாண்மையும் பாதிக்கப்படுகிறது. சர்வதேச எல்லை சட்டத்தை அனைத்து நாடுகளும் பின்பற்ற வேண்டும்.

சீன அரசும், ஊடகங்களும் இந்த பிரச்சினையை ஊதி பெரிதாக்குகின்றன. ஆனால் அதே சமயம் இந்தியா நிதானமாகவும், உறுதியாகவும் செயல்படுகிறது. இரு நாடுகளும் எல்லை விவகாரத்தில் எவ்வித நிபந்தனையும் இன்றி பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணும் என நம்புகிறோம்.

இரு நாட்டு எல்லை பிரச்சினையை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். மேலும் நட்பு நாடான இந்தியாவுடன் இதுதொடர்பாக அவ்வப்போது ஆலோசனையும் நடத்துகிறோம். தேவைப்பட்டால் இந்தியாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் இந்தியாவிடம் இருந்து இதுவரை அது போன்ற கோரிக்கை எதுவும் எங்களுக்கு வரவில்லை. எல்லையில் அமைதி திரும்ப அமெரிக்கா கண்டிப்பாக ஆதரவு அளிக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story