உலகைச்சுற்றி...


உலகைச்சுற்றி...
x
தினத்தந்தி 28 Aug 2017 9:30 PM GMT (Updated: 2017-08-29T02:09:03+05:30)

* கொரிய தீபகற்ப பகுதியில் பதற்றம் நீடித்தும் வரும் நிலையில் சீனா, தென்கொரியாவுக்கு செல்லக்கூடிய விமானங்களின் எண்ணிக்கையை கணிசமாக குறைத்து உள்ளது. இதன் காரணமாக சீனாவுக்கு பெரிய அளவில் பொருளாதார இழப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* மியான்மர் நாட்டில் ராகினே மாகாணத்தில் ரோஹிங்யா போராளிகளுக்கும் அரசு படைக்கும் இடையே கடுமையான சண்டை நடந்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தீவிரம் அடைந்து உள்ள இந்த மோதலில் இதுவரை 104 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். அங்கு பதற்றமான சூழ்நிலை நீடிப்பதன் காரணமாக ஆயிரக்கணக்கான ரோஹிங்யா முஸ்லிம்கள் மற்றும் பவுத்தர்கள் உயிர் பிழைக்க வேண்டி அந்த மாகாணத்தை விட்டு வெளியேறிவிட்டனர்.

* அமெரிக்காவின் போர்க்கப்பலான யு.எஸ்.எஸ். ஜான் மெக்காயின் கடந்த 21-ந்தேதி மலேசியாவின் மலாக்கா நீரிணை பகுதியில் சென்று கொண்டிருந்த போது, நைஜீரிய நாட்டு சரக்கு கப்பலுடன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 10 மாலுமிகள் மாயமாகினர். அவர்கள் இறந்திருக்கலாம் என முடிவு செய்யப்படடது. நீண்ட தேடுதல் வேட்டைக்கு பின்னர் மாயமான 10 மாலுமிகளின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டன.

* கென்யாவில் சுற்றுச்சூழலை காக்கும் பொருட்டு பிளாஸ்டிக் பைகளுக்கு நாடு முழுவதும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. தடையை மீறி பிளாஸ்டிக் பைகளை உற்பத்தி செய்தாலோ, விற்பனை செய்தாலோ அல்லது பயன்படுத்தினாலோ அவர்களுக்கு 38 ஆயிரம் டாலர் அபராதம் அல்லது 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

* தெற்கு சூடான் நாட்டில் பத்திரிகையாளராக பணியாற்றி வந்த அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்டோபர், கயா நகரில் அரசுப்படைக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடந்த மோதலின் போது கொல்லப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

Next Story