டெக்சாஸ் மாகாணத்தில் புயல் தாக்கிய பகுதிகளை டிரம்ப் இன்று பார்வையிடுகிறார்


டெக்சாஸ் மாகாணத்தில் புயல் தாக்கிய பகுதிகளை டிரம்ப் இன்று பார்வையிடுகிறார்
x
தினத்தந்தி 28 Aug 2017 10:00 PM GMT (Updated: 2017-08-29T02:15:17+05:30)

ஹார்வே புயல் பாதித்த பகுதிகளை ஜனாதிபதி டிரம்ப் இன்று பார்வையிடுவதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வாஷிங்டன், 

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை கடந்த 26-ந்தேதி ‘ஹார்வே’ என்ற பயங்கர புயல் தாக்கியது. கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் சக்தி வாய்ந்த இந்த புயலால் மணிக்கு 215 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசியது. அத்துடன் கனமழையும் கொட்டியதால் லட்சக்கணக்கான மக்கள் மிகுந்த இன்னலுக்குள்ளாகி உள்ளனர்.

வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் மீது மரங்கள் வேருடன் சாய்ந்து பெருத்த சேதத்தை உருவாக்கின. மின்சாரம், தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் ஏராளமான பகுதிகள் இருளில் மூழ்கின. சுமார் 50 அங்குல அளவுக்கு பெய்த மழையால் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. இந்த புயல் மற்றும் வெள்ளத்துக்கு 5 பேர் பலியாகினர்.

புயல் பாதித்த பகுதிகளில் 1000-க்கும் மேற்பட்ட தேசிய பாதுகாவலர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணிகளை மாகாண அதிகாரிகளுடன் இணைந்து அமெரிக்க அரசு முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறது.

ஹார்வே புயல் பாதித்த பகுதிகளை ஜனாதிபதி டிரம்ப் இன்று (செவ்வாய்க்கிழமை) பார்வையிடுவதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக இந்த புயல் மற்றும் வெள்ள பாதிப்பை பேரழிவு என பிரகடனம் செய்திருந்த டிரம்ப், அங்கு நிவாரண பணிகளை மேற்கொண்டு வரும் அதிகாரிகளை வெகுவாக பாராட்டி இருந்தார். 

Next Story