வடகொரியாவின் ஏவுகணை ஜப்பானை தாண்டி சென்றதால் பதற்றம்; பாதுகாப்பிற்கு முழு நடவடிக்கை - அபே


வடகொரியாவின் ஏவுகணை ஜப்பானை தாண்டி சென்றதால் பதற்றம்; பாதுகாப்பிற்கு முழு நடவடிக்கை - அபே
x
தினத்தந்தி 29 Aug 2017 4:11 AM GMT (Updated: 2017-08-29T09:40:56+05:30)

பொதுமக்களின் பாதுகாப்பிற்கு ஜப்பான் முழு நடவடிக்கையையும் எடுக்கும் என அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபே கூறிஉள்ளார்.


டோக்யோ,

கொரிய தீபகற்பத்தில் தென்கொரியாவுக்கு அச்சுறுத்தலாக திகழும் வடகொரியா தனது எல்லையில் படைகளை குவித்து வைத்திருப்பதுடன், அவ்வப்போது அணுகுண்டு, ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. ஐ.நா. விதித்த பல்வேறு தடைகளையும் மீறி வடகொரியா செயல்பட்டு வருகிறது. 

டொனால்டு டிரம்ப் ஆட்சிக்கு வந்தபின்னர் வடகொரியா செயல்பாட்டிற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்தது. 

எச்சரிக்கையையும் மீறி வடகொரியா செயல்பட்டதால் அந்நாட்டு மீதான பொருளாதார தடைகளை மேலும் வலுப்படுத்த அமெரிக்கா நடவடிக்கையை மேற்கொண்டது. அதன் விளைவாக வடகொரியா மீது கடும் பொருளாதார தடைகளை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விதித்தது. 

தென் கொரியா பேச்சுவார்த்தைக்கு தயார் என அழைப்பு விடுத்தும் எதையும் கண்டுக்கொள்ளாத வடகொரியா எப்போதும் போல தன்னுடைய பாதையில் பயணிக்க தொடங்கிவிட்டது. மீண்டும் ஏவுகணை பரிசோதனை செய்து வருகிறது. ஏற்கனவே அமெரிக்காவை மிரட்டிய வடகொரியா இப்போது ஏவிய ஏவுகணையானது ஜப்பானை கடந்தது சென்றது சர்வதேச அரங்கில் பெரும் அதிர்ச்சியையும், பதட்டத்தையும் எழுப்பி உள்ளது. தென் கொரியா - அமெரிக்க கூட்டுப்படைப் பயிற்சியினை மேற்கொள்ள உள்ள நிலையில் வடகொரியா மீண்டும் ஏவுகணை பரிசோதனையை செய்து உள்ளது. வடகொரியா மூன்று ஏவுகணைகளை வீசி உள்ளது. ஏவுகணையானது ஜப்பானின் வான்வழியாக சென்று உள்ளது.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ள ஜப்பான் தன்னுடைய நாட்டு மக்களை பாதுகாக்க முழு நடவடிக்கையையும் எடுக்க உள்ளதாக தெரிவித்து உள்ளது.

ஏற்கனவே வடகொரியாவில் இருந்து எச்சரிக்கை இருப்பதாக அந்நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. அவ்வபோது மக்கள் பங்கேற்கும் ஒத்திகையும் ஜப்பானில் நடைபெற்றது. “வடகொரியா வீசிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையானது ஜப்பானின் வான் வழியாக சென்று உள்ளது. நாங்கள் உடனடியாக தகவல்களை திரட்டிஉள்ளோம், முழுமையாக விவரங்களை ஆய்வு செய்து உள்ளோம், ஜப்பான் மக்களை பாதுகாக்க அனைத்து நடவடிக்கையும் அரசு எடுக்கும்,”என கூறிஉள்ளார் அபே. வடகொரியாவின் சுனான் என்ற இடத்தில் இருந்து கிழக்கு நோக்கி வீசப்பட்ட ஏவுகணையானது ஜப்பான் வான்வழியாக பாய்ந்து உள்ளது. 

ஜப்பானின் ஹோக்காய்டோ தீவிற்கு மேல சென்ற ஏவுகணையானது 1,180 கிலோ மீட்டர் தொலைவில் பசிபிக் கடலில் விழுந்தது என அந்நாட்டு அரசு அதிகாரி தெரிவித்து உள்ளார். 


Next Story