டோக்லாம் பிரச்சனை: இந்தியா பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் இந்தியாவிற்கு சீன ராணுவம் மறைமுக எச்சரிக்கை


டோக்லாம் பிரச்சனை: இந்தியா பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் இந்தியாவிற்கு சீன ராணுவம் மறைமுக எச்சரிக்கை
x
தினத்தந்தி 29 Aug 2017 1:38 PM GMT (Updated: 29 Aug 2017 1:38 PM GMT)

டோக்லாம் பிரச்சனையில் இந்தியா பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என இந்தியாவிற்கு சீன ராணுவம் மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளது.

பீஜிங்,

சிக்கிம் எல்லையில் இந்தியா, சீனா, பூடான் நாடுகளின் முச்சந்திப்பில் டோக்லாம் என்னும் பகுதி உள்ளது. இங்கு கடந்த ஜூன் மாதம் சீன ராணுவம் சாலை அமைக்கும் நடவடிக்கையில் இறங்கியது. இதை இந்திய ராணுவம் தடுத்தது.

இதனால் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்தியாவும், சீனாவும் இங்கு படைகளை குவித்தன. இரு நாடுகளும் படைகளை வாபஸ் பெறவேண்டும் என்ற கோரிக்கையை வைத்தன.இந்த நிலையில் இரு தரப்பிலும் படைகள் விலக்கிக் கொள்ளப்படவில்லை. இதனால் இப்பகுதியில் போர் பதற்றம் நிலவி வந்தது.

இதைத்தொடர்ந்து மத்திய வெளியுறவு அமைச்சகம் டோக்லாம் பகுதியில் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து தூதரக ரீதியாக சீனாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.

இரு தரப்பிலும் தங்களுடைய கண்ணோட்டம், கவலைகள், நலன்கள் முன்வைக்கப்பட்டன. அதன் அடிப்படையில், டோக்லாமில் இரு நாடுகளும் படைகளை விரைவில் வாபஸ் பெறுவதென ஒப்புக் கொள்ளப்பட்டது. 

இந்த நிலையில் சீன ராணுவத்தின் மூத்த அதிகாரி வியூ குயான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்தியா-சீனா இடையே ஏற்பட்ட பிரச்சனையை தொடர்ந்து சீனா ராணுவம் வழக்கம் போல் தனது எல்லை மற்றும் இறையாண்மையை தொடர்ந்து விழிப்புடன் காத்து நிற்கும். டோக்லாம் பிரச்சனையில் இருந்து இந்தியா பாடம் கற்றுக்கொள்ள  வேண்டும் என்பதை இந்த தருணத்தில் நினைவுபடுத்தி கொள்கிறேன். சர்வதேச சட்டங்களுக்கு மதிப்பளித்து சீனாவுடன் இணைந்து செயலாற்றி எல்லையில் அமைதி மற்றும் பாதுகாப்பு நிலவ இந்தியா முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story