உலகைச் சுற்றி


உலகைச் சுற்றி
x
தினத்தந்தி 30 Aug 2017 9:30 PM GMT (Updated: 30 Aug 2017 6:04 PM GMT)

* தென்கொரியாவில் அதிபரின் பொருளாதார ஆலோசகராக இருந்து வந்த சோ யோன் ஜே, அமெரிக்காவுக்கான தூதராக நியமிக்கப்பட்டு உள்ளார். அதேபோல் லீ சூ–ஹூன் என்பவர் ஜப்பானுக்கான தூதராகவும், நோஹ் யாங்–மின் என்பவர் சீனாவுக்கான மூத்த தூதரக அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

*  ஏமன் நாட்டின் தலைநகர் சானாவில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் சோதனை சாவடியை குறிவைத்து சவுதி கூட்டுப்படைகள் வான்தாக்குதல் நடத்தின. இதில் பலர் கொல்லப்பட்டதாகவும், ஏராளமானோர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

* சூடானில் புகழ்பெற்ற மனித உரிமை ஆர்வலரான முடாவி இப்ராஹிம் ஆடம் என்பவரை, உளவு பார்த்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் கடந்த ஆண்டு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது அந்நாட்டின் அதிபர் ஓமர் அல்–பாசீர் மனிதாபிமான அடிப்படையில் முடாவி இப்ராஹிம் ஆடமை விடுவித்து உள்ளார்.

*  மியான்மரில் ராகினே மாகாணத்தில் ரோஹிங்யா போராளிகளுக்கும், அரசு படைக்கும் இடையே நடந்து வரும் மோதலின் காரணமாக கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 18 ஆயிரம் ரோஹிங்யா முஸ்லிம்கள் அந்த நாட்டை விட்டு வெளியேறி அண்டை நாடான வங்காளதேசத்தில் தஞ்சம் புகுந்து உள்ளதாக சர்வதேச அகதிகள் அமைப்பு தெரிவித்து உள்ளது. 

*  மலேசியாவின் கெலன்டன் மாகாணத்தில் உள்ள கடற்பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடிப்பது அடிக்கடி நடைபெற்று வருகிறது. இவ்வாறு மீன்பிடிப்பில் ஈடுபட்ட வெளிநாட்டு படகை மலேசிய கடற்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் அந்த படகை தீ வைத்து எரித்தனர். இவ்வாறு படகு ஒன்று தீ வைத்து எரிக்கப்பட்டது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. இருப்பினும் அந்த படகு எந்த நாட்டுக்கு சொந்தமானது என்ற தகவலை அவர்கள் வெளியிடவில்லை. 

Next Story