இந்தியா உருவாக்கியது ஐஐடி, ஐஐஎம்; பாகிஸ்தான் உருவாக்கியது எல்இடி, ஜெஇஎம்! சுஷ்மா சுவராஜ்


இந்தியா உருவாக்கியது ஐஐடி, ஐஐஎம்; பாகிஸ்தான் உருவாக்கியது எல்இடி, ஜெஇஎம்! சுஷ்மா சுவராஜ்
x
தினத்தந்தி 24 Sep 2017 4:10 AM GMT (Updated: 2017-09-24T09:40:14+05:30)

ஐ.நா. சபையில் இந்தியாவின் மீது குற்றச்சாட்டுகளை சுமத்திய பாகிஸ்தானுக்கு இந்தியா சரியான பதிலடியை கொடுத்தது.


நியூயார்க்,

நியூயார்க் நகரில் நடந்து வரும் ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் அப்பாஸி கடந்த வியாழக்கிழமை உரையாற்றுகையில்  இந்தியா மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளதாகவும், பயங்கரவாதத்துக்கு ஊக்கமளிப்பதாகவும் குற்றம் சாட்டினார். பாகிஸ்தானின் இந்த குற்றச்சாட்டுக்களுக்கு நேற்று ஐ.நா.சபையில் பேசிய இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் சரியான பதிலடியை கொடுத்தார்.  பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலையாக பாகிஸ்தான் செயல்பட்டு வருகிறது, பயங்கரவாத பூமியாக இருப்பது பற்றி பாகிஸ்தான் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் பதிலடி கொடுத்தார். 

பாகிஸ்தானின் பல்வேறு செயல்களை வரிசைப்படுத்தி, அதனுடைய உண்மை முகத்தை தோலுரித்தார். 

மேலும் சுஷ்மா பேசுகையில், இந்தியா ஐஐடி, ஐஐஎம் போன்ற அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிலையங்களை உருவாக்கி வருகிறது. 

இந்திய கல்வி நிறுவனங்கள் உலகின் பெருமிதமாக விளங்குகின்றன. ஆனால் பாகிஸ்தான் தன்னுடைய மக்களுக்கு பயங்கரவாதத்தைத் தவிர வேறு எதை அளித்தது? இந்தியா விஞ்ஞானிகள், அறிஞர்கள், மருத்துவர்கள், பொறியாளர்களை உருவாக்கி வருகிறது, ஆனால் நீங்கள் (பாகிஸ்தான்) எதை உருவாக்கினீர்கள்? நீங்கள் எல்இடி (லஷ்கர்-ஏ-தொய்பா), ஜேஇஎம் (ஜெய்ஷ்-ஏ-முகமது), ஹிஸ்புல் முஜாஹிதீன், ஹக்கானி நெட்வர்க் போன்ற பயங்கரவாத அமைப்புகளைத்தான் உருவாக்கினீர்கள். பாகிஸ்தான், பயங்கரவாதத்தை வளர்க்க செலவிடும் நிதியை தன்னாட்டின் வளர்ச்சிக்கு செலவிடுமானால் பாகிஸ்தானும், உலகமும் பாதுகாப்பாக இருக்கும். 

பாகிஸ்தான் உருவாக்கிய பயங்கரவாத அமைப்புகள் இந்தியாவுக்கு மட்டுமன்றி, அண்டை நாடுகளான ஆப்கானிஸ்தான், வங்கதேசத்திற்கும்  அச்சுறுத்தலாக உள்ளது உள்ளது கடுமையாக சாடினார். பாகிஸ்தான் பிரதமர் அப்பாஸியை குறிப்பிட்டு பேசிய சுஷ்மா சுவராஜ், இந்தியாவிற்கு எதிராக குற்றச்சாட்டுகளை மட்டுமே சுமத்தி பாகிஸ்தான் தலைவர் நேரத்தை வீணாக்கி உள்ளார் என்றார். பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலையாக இருப்பது ஏன்? என்பது குறித்தும் பாகிஸ்தான் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றார் சுஷ்மா சுவராஜ். 

எங்களுக்கு பாகிஸ்தான் தொடர்ச்சியாக பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்து வந்தாலும் இந்தியா உயர்ந்துதான் நிற்கிறது. இருநாடுகளும் அடுத்தடுத்த சில மணிநேரங்களில் சுதந்திரம் பெற்றது. இந்தியா சுதந்திரம் பெற்றதற்குப் பிந்தைய 70 ஆண்டு காலகட்டத்தில் பல்வேறு கட்சிகளின் தலைமையில் பல்வேறு அரசுகள் இருந்து, நாங்கள் நீடித்த ஜனநாயக சக்தியாக திகழ்கிறோம். ஆட்சியிலிருந்த ஒவ்வொரு அரசும் இந்தியாவின் வளர்ச்சிக்குப் பங்காற்றி உள்ளது என்றார் சுஷ்மா சுவராஜ். பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கையில் இந்தியா ஒவ்வொரு துறையிலும் கண்டுள்ள வளர்ச்சியை வரிசைப்படுத்தி பேசினார் சுஷ்மா சுவராஜ். சுஷ்மாவின் பேச்சுக்கு அரங்கத்திலே பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Next Story