ரோஹிங்யா அகதிகளுக்கு செல்போன் ‘சிம்’ கார்டுகள் வழங்குவதற்கு வங்காளதேசம் தடை விதிப்பு


ரோஹிங்யா அகதிகளுக்கு செல்போன் ‘சிம்’ கார்டுகள் வழங்குவதற்கு வங்காளதேசம் தடை விதிப்பு
x
தினத்தந்தி 24 Sep 2017 10:45 AM GMT (Updated: 2017-09-24T16:14:48+05:30)

ரோஹிங்யா அகதிகளுக்கு செல்போன் சிம் கார்டுகளை விற்பனை செய்ய வங்காளதேசம் தடை விதித்து உள்ளது.


டாக்கா, 


மியான்மர் நாட்டில் ராகினே மாகாணத்தில் கடந்த மாதம் 25–ந் தேதி அர்சா என்னும் ரோஹிங்யா முஸ்லிம் கிளர்ச்சியாளர்கள், போலீசாரை தாக்கிய விவகாரம் பூதாகரமாகி விட்டது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து ஒட்டுமொத்த ரோஹிங்யா முஸ்லிம் மக்கள் மீதும் அந்த நாட்டின் ராணுவமும், புத்த மதத்தினரும் வன்முறையை கட்டவிழ்த்து விட்டு கொண்டிருப்பதாக சர்வதேச அளவில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 ரோஹிங்யா முஸ்லிம் மக்கள் வசிக்கக்கூடிய கிராமங்களில் தீ வைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. பல்வேறு இன்னல்களுக்கு இடையே தத்தளித்து வருகிற ரோஹிங்யா முஸ்லிம் மக்கள் உயிர் பிழைப்பதற்காக வங்காளதேசத்துக்கு சென்று தஞ்சம் அடைந்து வருகின்றனர். 
இதுவரையில் 4 லட்சத்திற்கும் அதிகமான ரோஹிங்யா முஸ்லிம் மக்கள் மியான்மரை விட்டு வெளியேறி வங்காளதேசம் வந்து உள்ளனர். வங்காளதேசம் எல்லை வந்து உள்ள ரோஹிங்யா அகதிகள் அடிப்படை தேவைகள் இன்றியும், மருத்துவ வசதியின்றியும் பல்வேறு பகுதிகளில் தங்கி உள்ளனர். வங்காளதேச அரசும் இவ்வளவு பெரிய அளவில் அகதிகளை ஏற்று பெரும் நெருக்கடியில் உள்ளது.

வங்காளதேசத்தில் ரோஹிங்யா அகதிகளுக்கு செல்போன் சிம் கார்டுகளை விற்பனை செய்ய அந்நாட்டு அரசு தடை விதித்து உள்ளது. வங்காளதேசத்தில் உள்ள தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு, அகதிகளுக்கு சிம் கார்டுகளை விற்பனை செய்யக்கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. கட்டுப்பாட்டை மீறி விற்பனை செய்தால் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டு உள்ளது. தொடக்கத்தில் இருந்தே அகதிகளுக்கு சிம் கார்டு விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது என அந்நாட்டு தொலை தொடர்பு அமைச்சக அதிகாரி கூறிஉள்ளார். வங்காளதேசம் தன்னுடைய நாட்டை சேர்ந்த பிரஜைகளுக்கும் அரசு வழங்கிய அடையாள அட்டையின்றி சிம் கார்டு வழங்க தடை விதித்து உள்ளது.

ரோஹிங்யா இஸ்லாமியர்களை மனிதநேய அடிப்படையில் நாங்கள் வரவேற்றோம், ஆனால் எங்களுடைய பாதுகாப்பில் சமரசம் கிடையாது என இவ்விவகாரம் தொடர்பாக பேச விரும்பாத அதிகாரி ஹலிம் கூறிஉள்ளார். புதியதாக வந்து உள்ள அகதிகளுக்கு பயோ-மெட்ரிக் அடையாள அட்டைகள் வழங்கிய பின்னர் இந்த தடையானது நீக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த அடையாள அட்டைகள் வழங்குவதற்கு 6 மாத காலங்கள் ஆகும் எனவும் கூறப்படுகிறது. ரோஹிங்யா அகதிகள் நாட்டின் பிற பகுதிகளில் பரவிவிடாமல் தடுக்கு சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உள்ளூர்வாசிகள் அடையாள அட்டையை கொண்டு அகதிகளுக்கு சிம் கார்டு வாங்கி கொடுக்கும் நிலையும் காணப்படுகிறது, இது குற்றச்செயலாகும் எனவும் எச்சரிக்கப்பட்டு உள்ளது.
 

Next Story