அமெரிக்கா வருவதற்கு 8 நாட்டு பயணிகளுக்கு தடை ஜனாதிபதி டிரம்ப் அதிரடி உத்தரவு


அமெரிக்கா வருவதற்கு 8 நாட்டு பயணிகளுக்கு தடை ஜனாதிபதி டிரம்ப் அதிரடி உத்தரவு
x
தினத்தந்தி 25 Sep 2017 10:45 PM GMT (Updated: 25 Sep 2017 9:26 PM GMT)

அமெரிக்கா வருவதற்கு வடகொரியா, வெனிசுலா உள்ளிட்ட 8 நாட்டு பயணிகளுக்கு தடை ஜனாதிபதி டிரம்ப் அதிரடி உத்தரவு

வாஷிங்டன்,

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்றுக்கொண்டதும் அவர் பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தார். அந்த வகையில் ஈரான், லிபியா, சோமாலியா, சிரியா, சூடான், ஏமன் ஆகிய 6 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் வருவதற்கு 90 நாட்கள் தடைவிதித்து உத்தரவு பிறப்பித்தார். இது அங்கு பல்வேறு போராட்டங்களுக்கு வழிவகுத்ததுடன், கோர்ட்டுகளில் வழக்குகளும் தொடரப்பட்டன.

இந்த நிலையில், 6 நாடுகள் மீதான தற்காலிக தடை தற்போது முடிவுக்கு வந்து உள்ளது. இதையடுத்து நேற்று முன்தினம் டிரம்ப் புதிய தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அந்த உத்தரவில், ஏற்கனவே உள்ள தடை பட்டியலில் இருந்து சூடான் நீக்கப்படுவதாகவும், வடகொரியா, வெனிசுலா, சாத் ஆகிய 3 நாடுகள் சேர்க்கப்படுவதாகவும் கூறப்பட்டு உள்ளது.

அதன்படி ஈரான், லிபியா, சோமாலியா, சிரியா, ஏமன், வடகொரியா, வெனிசுலா, சாத் ஆகிய 8 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்கா வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த தடை உத்தரவானது அடுத்த மாதம் 18-ந் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. புதிய தடை உத்தரவு குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்து உள்ள டிரம்ப், “அமெரிக்காவை பாதுகாப்பான நாடாக்குவதே என்னுடைய முதல் இலக்கு. தடை விதிக்கப்பட்டு உள்ள அந்த 8 நாடுகளை சேர்ந்தவர்களை அமெரிக்காவுக்குள் அனுமதித்தால் நாம் பாதுகாப்புடன் இருக்க முடியாது” என குறிப்பிட்டு உள்ளார்.

Related Tags :
Next Story