ஐ.நா. மன்றத்தின் மேற்பார்வையில் சுதந்திர தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்த முன்வர வேண்டும்


ஐ.நா. மன்றத்தின் மேற்பார்வையில் சுதந்திர தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்த முன்வர வேண்டும்
x
தினத்தந்தி 26 Sep 2017 10:30 PM GMT (Updated: 26 Sep 2017 8:24 PM GMT)

ஐ.நா. மன்றத்தின் மேற்பார்வையில் சுதந்திர தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்த முன்வர வேண்டும் என்று ஜெனீவாவில் நடந்து வரும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் வைகோ பேசினார்.

ஜெனீவா,

ஐ.நா. மன்றத்தின் மேற்பார்வையில் சுதந்திர தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்த முன்வர வேண்டும் என்று ஜெனீவாவில் நடந்து வரும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் வைகோ பேசினார்.

ஜெனீவா சென்றுள்ள ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, அங்குள்ள ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் பிரதான அரங்கத்தில் நேற்று 2 முறை உரையாற்றினார். அப்போது, வைகோ பேசியதாவது:–

திலீபன் மரணம்

இந்த நாள், செப்டம்பர் 26–ந் தேதி தமிழர்களுக்குத் துக்க நாள் ஆகும். 1987–ம் ஆண்டு செப்டம்பர் 26–ந் தேதியன்று தான், தமிழ் ஈழத்தின் மாவீரனும், தியாகியுமான திலீபனின் உயிர்ச்சுடர் அணைந்தது. இலங்கையின் தமிழர் தாயகத்தில், வலுக்கட்டாயமாகக் குடியேற்றப்பட்ட சிங்களக் குடியேற்றங்களை அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட 5 கோரிக்கைகளுக்காக, செப்டம்பர் 15–ந் தேதி உண்ணாவிரதத்தை தொடங்கி, 12–ம் நாள் திலீபன் உயிர் நீத்தார். மனித உரிமைகள் மீறலின் விளைவு தான் திலீபனின் சோக மரணம் ஆகும்.

தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் ஆயுதம் ஏந்தாத அறப்போராட்டத்தை நடத்தியதற்கு சிங்கள அரசின் குண்டு வீச்சும், துப்பாக்கி வேட்டும் தான் எதிர்வினை ஆனதால், விடுதலைப்புலிகள் ஆயுதப் போராட்டம் நடத்த நேர்ந்தது என்பதை, இந்த மனித உரிமைகள் கவுன்சிலில் உள்ள உறுப்பு நாடுகளின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

மாவீரன் திலீபனுக்குத் தமிழர்கள் ஆகிய நாங்கள் வீர வணக்கம் செலுத்துகிறோம். சுதந்திர இறையாண்மை உள்ள தமிழ் ஈழ தேசத்தை அமைக்கச் சபதம் ஏற்கிறோம்.

பொது வாக்கெடுப்பு

இலங்கையில் ஈழத்தமிழர்கள் இன அழிப்புக்கு ஆளானதால், 1976–ம் ஆண்டு வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மூலமும் அதன் பின்னர் பிரபாகரனின் ஆயுதப் போராட்டத்தின் மூலமும், இறையாண்மை உள்ள சுதந்திர ஈழத்தமிழ் தேசத்தை அமைக்கப் போராடினர்.

மனித உரிமைகள் கவுன்சிலின் உறுப்பு நாடுகளுக்கு நான் வேண்டுகோள் விடுப்பதெல்லாம், தமிழர் தாயகத்தில் உள்ள சிங்கள ராணுவத்தையும், சிங்களக் குடியேற்றங்களையும் வெளியேற்றிவிட்டு, ஐ.நா. மன்றத்தின் மேற்பார்வையில், வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும், உலகெங்கிலும் புலம்பெயர் வாழ் ஈழத்தமிழர்களிடத்திலும், சுதந்திரத் தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்த முன்வர வேண்டும் என்பதுதான்.

இவ்வாறு வைகோ பேசினார்.


Next Story