பயங்கரவாதிகள் இடையே நல்லவர்கள், கெட்டவர்கள் என பார்க்கக் கூடாது ஐ.நா. சபையில் இந்தியா வலியுறுத்தல்


பயங்கரவாதிகள் இடையே நல்லவர்கள், கெட்டவர்கள் என பார்க்கக் கூடாது ஐ.நா. சபையில் இந்தியா வலியுறுத்தல்
x
தினத்தந்தி 26 Sep 2017 10:30 PM GMT (Updated: 26 Sep 2017 9:35 PM GMT)

பயங்கரவாதிகள் இடையே நல்லவர்கள், கெட்டவர்கள் என்று வித்தியாசம் பார்க்கக் கூடாது என ஐ.நா. சபையில் இந்தியா வலியுறுத்தியது.

நியூயார்க்,

நியூயார்க் நகரில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில், ஆப்கானிஸ்தான் தொடர்பான விவாதம், நேற்று முன்தினம் நடந்தது.

இதில் இந்தியாவுக்கான நிரந்தர பிரதிநிதி சையத் அக்பருதீன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பயங்கரவாதிகள் இடையே நல்லவர்கள், கெட்டவர்கள் என்று நாம் வித்தியாசம் பார்க்கக்கூடாது.

தலீபான்கள், ஹக்கானி வலைச்சமூகம், அல்கொய்தா, ஐ.எஸ்., லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது இயக்கங்கள் அனைத்தும் பயங்கரவாத இயக்கங்கள்தான். இவற்றில் பலவற்றை ஐ.நா. தடை செய்துள்ளது.

சர்வதேச சமுதாயம் அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது. பயங்கரவாத சக்திகளும், தீவிரவாத சக்திகளும் எங்கும், எந்த அளவிலும் புகலிடம் தேடிக்கொள்ளக்கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டிய அதிமுக்கிய கடமை, சர்வதேச சமூகத்துக்கு உள்ளது.

பயங்கரவாத குழுக்களை, அவர்களின் செய்கைகளைக்கொண்டு நியாயப்படுத்தாமல் பயங்கரவாத இயக்கங்களாகத்தான் கருத வேண்டும்.

ஆப்கானிஸ்தான் நிலவரம் வேதனை தரக்கூடியதாக அமைந்துள்ளது. அங்கு பாதுகாப்பு நிலைமை மிக மோசமாக உள்ளது. ஆஸ்பத்திரிகள், பள்ளிக்கூடங்கள், சர்வதேச வளர்ச்சி முகமைகள், தூதரகங்கள் மீது மட்டுமல்லாது இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகளின்போதும்கூட தொடர்ந்து தாக்குதல்கள் நடந்து வருகின்றன.

தங்களுடைய மோசமான நடவடிக்கைகள் மூலமாக பயங்கரவாதிகள் நிதி திரட்டுவதின்மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத செயல்களுக்கு நிதி அளிப்பதற்கு எதிராக பொருளாதார தடையை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஆயுதம்போலத்தான் பயன்படுத்த வேண்டும்.

ஐ.நா. சபையிலும் சரி, பிற சர்வதேச அமைப்புகளிலும் சரி, ஆப்கானிஸ்தானில் இறையாண்மையையும், ஸ்திரத்தன்மையையும் வலுப்படுத்துவதற்கு நாம் ஆதரவு அளிக்க வேண்டும் என்பதை மனதில் கொள்ள வேண்டும். அரசுக்கு எதிரான பயங்கரவாத சக்திகள் பதுங்கி இருந்து கொண்டு, ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதிகளை பலவீனப்படுத்துகின்றன.

பயங்கரவாத குழுக்கள், ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உரித்தான வளங்களை கொள்ளையடிக்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story