பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தின் வீட்டுக்காவலை பாகிஸ்தான் அரசு நீட்டித்தது


பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தின் வீட்டுக்காவலை பாகிஸ்தான் அரசு நீட்டித்தது
x
தினத்தந்தி 27 Sep 2017 10:43 AM GMT (Updated: 2017-09-27T16:13:13+05:30)

பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தின் வீட்டுக்காவலை பாகிஸ்தான் அரசு நீட்டித்து உள்ளது.


லாகூர்,மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ந்தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 10 பேர் கடல் மார்க்கமாக நுழைந்து குண்டுகளை வெடித்தும், துப்பாக்கியால் சுட்டும் கொடூர தாக்குதல்கள் நடத்தினர். 150-க்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்பட்ட இந்த தாக்குதல்களை பாகிஸ்தானில் அமர்ந்து கொண்டு, மூளையாக இருந்து செயல்படுத்தியவன் ஹபீஸ் சயீத். 

லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் தலைவன். அந்த இயக்கம் தடை செய்யப்பட்ட நிலையில், தற்போது ஜமாத்-உத்-தவா என்ற இயக்கத்தை நடத்தி வருகிறான். இவ்வியக்கமும் தடைவிதிக்கப்பட்ட இயக்கமாக ஐ.நா., அமெரிக்கா அறிவித்து உள்ளது. இந்திய தரப்பில் பல்வேறு முறை வலியுறுத்தப்பட்டும் நடவடிக்கை எடுக்காத பாகிஸ்தான், அமெரிக்காவில் ஆட்சிக்கு வந்த டொனால்டு டிரம்ப்பின் நடவடிக்கையினால் ஆட்டம் கண்டது. 

இந்தியாவில் இருந்து மேலும் நெருக்கடி எழும், அமெரிக்காவின் கோபத்திற்கு உள்ளாக வேண்டும் என்ற நிலையில் ஹபீஸ் சயீத்தும், அவரது கூட்டாளிகளையும் பாகிஸ்தான் அரசு கடந்த ஜனவரி 31-ல் வீட்டுக்காவலில் வைத்தது. பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் ஹபீஸ் சயீத்தை பாகிஸ்தான் அரசு காவலில் வைத்தது. பின்னரும் அவனுடைய வீட்டுக்காவலை அந்நாட்டு அரசு பாதுகாப்பை காரணம் காட்டி நீட்டித்தது. பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தின் வீட்டுக்காவல் முடிவுக்கு வரும்நிலையில் மீண்டும் காவல் நீட்டிக்கப்பட்டு உள்ளது. வீட்டு சிறையில் இருக்கும் ஹபீஸ் சயீத் மில்லி முஸ்லிம் லீக் என்ற கட்சியை தொடங்கி உள்ளான், அதனை பதிவு செய்ய பாகிஸ்தான் அரசு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

இந்நிலையில் ஹபீஸ் சயீத்தை விடுவிக்கும் போது நாட்டில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்த சதிதிட்டம் தீட்டப்பட்டு உள்ளது என குற்றம் சாட்டி பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண உள்துறை காவலை நீட்டித்து உள்ளது. ஜமாத்-உத்-தவா, லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கங்களின் தலைவன் ஹபீஸ் சயீத்தை ஐ.நா. மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பயங்கரவாதியாக அறிவித்து உள்ளது. ஹபீஸ் சயீத்தின் தலைக்கு அமெரிக்கா 1 கோடி அமெரிக்க டாலரை பரிசாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story