வடகொரியாவின் அச்சுறுத்தலுக்கு பதிலடி தர கொரிய தீபகற்பத்தில் அமெரிக்க போர் விமானங்கள் அதிரடி ஒத்திகை


வடகொரியாவின் அச்சுறுத்தலுக்கு பதிலடி தர கொரிய தீபகற்பத்தில் அமெரிக்க போர் விமானங்கள் அதிரடி ஒத்திகை
x
தினத்தந்தி 11 Oct 2017 11:45 PM GMT (Updated: 11 Oct 2017 8:51 PM GMT)

வடகொரியாவின் அச்சுறுத்தலுக்கு பதிலடி தரும் விதமாக கொரிய தீபகற்ப பகுதியில் அமெரிக்க போர் விமானங்கள் இரவு நேரத்தில் பறந்து அதிரடியாக ஒத்திகையில் ஈடுபட்டன.

சியோல்,

அப்பகுதியில் இதனால் போர் பதற்றம் தீவிரம் அடைந்துள்ளது.

வடகொரியாவின் தலைவராக உள்ள கிம் ஜாங் அன், முதலில் அண்டை நாடுகளான தென்கொரியா, ஜப்பான் ஆகியவற்றை அச்சுறுத்தும் விதமாக ஏவுகணை சோதனைகளை நடத்தினார். தனது நட்பு நாடுகளுக்கு ஆதரவுக் கரம் நீட்டும் விதமாக வடகொரியாவை அமெரிக்கா கண்டித்தது. இதைத் தொடர்ந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை மற்றும் அணுகுண்டு, ஹைட்ரஜன் குண்டு சோதனைகளை வடகொரியா வெற்றிகரமாக நிகழ்த்தியது.

இதனால் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பல்வேறு பொருளாதார தடைகளை வடகொரியாவுக்கு விதித்தது. அதைப் பொருட்படுத்தாமல் கிம் ஜாங் அன் கடந்த பிப்ரவரி மாதம் முதல் இதுவரை 22 ஏவுகணை சோதனைகளை நடத்தினார். இதில் அமெரிக்காவின் குவாம் தீவை தாக்கும் விதமாக நடத்தப்பட்ட ஏவுகணை சோதனையும் ஒன்றாகும்.

இந்த ஏவுகணை ஜப்பானின் ஹொக்கைடோ தீவின் மேலாக பறந்து சென்று கடலில் விழுந்தது. இதனால் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடும் அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அண்மையில் அவர் கூறும்போது ‘‘வடகொரியாவுடன் தூதரக பேச்சுவார்த்தை நடத்துவதெல்லாம் பலன் தராது. அந்த நாட்டை வழிக்கு கொண்டு வரவேண்டும் என்றால் ஒன்றே ஒன்றால் மட்டும்தான் முடியும்’’ என்று போர் தொடுப்பது குறித்து மறைமுகமாக குறிப்பிட்டார்.

இதன் எதிரொலியாக வடகொரியா மேலும் சில ஏவுகணை சோதனைகளை கொரிய தீபகற்ப பகுதியில் நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், இதற்கு பதிலடி தரும் விதமாக அமெரிக்கா தனது குவாம் தீவில் உள்ள ஆன்டர்சன் ராணுவ விமான தளத்தில் இருந்து பி–1பி லான்சர் என்னும் அதிநவீன பிரமாண்ட போர் விமானங்கள் இரண்டை கொரிய தீபகற்ப பகுதிக்கு நேற்று முன்தினம் அனுப்பி வைத்தது.

இவை கொரிய தீபகற்பத்துக்குள் நுழைந்ததும், தென்கொரிய ராணுவத்தின் எப்–15 கே என்னும் 2 போர் விமானங்களுடன் இணைந்து கொண்டன. இந்த 4 விமானங்களும் நேற்று முன்தினம் இரவே பறந்து அதிரடியாக போர் ஒத்திகையில் ஈடுபட்டன. முதல் ஒத்திகை தென்கொரியாவின் கிழக்கு பகுதியில் நடத்தப்பட்டது. அப்போது அமெரிக்க போர் விமானங்கள் இரண்டும், வான்வழியில் இருந்து நிலத்தில் உள்ள இலக்குகளை குறிவைத்து தாக்கும் ஏவுகணைகளை சரமாரியாக வீசி சோதனை நடத்தின. 2–வது ஒத்திகை தென்கொரியாவின் தெற்கு பகுதி மற்றும் சீனாவுக்கு இடையேயான கடல் பகுதியில் நிகழ்த்தப்பட்டது.

இதுபற்றி அமெரிக்க விமானப்படை மேஜர் பேட்ரிக் ஆப்பிள்கேட் கூறுகையில், எங்களது நட்பு நாடுகளின் பாதுகாப்புக்காக கொரிய தீபகற்பத்தில் இரவு நேரங்களில் போர் விமானங்கள் பறந்து ஒத்திகையில் ஈடுபட்டன. இந்த போர் ஒத்திகை மிகவும் பாதுகாப்பான முறையிலும், வலிமையை வெளிப்படுத்தும் விதமாகவும் அமைந்திருந்தது. தென்கொரியாவும், ஜப்பானும் இதில் தங்களுடைய வலிமையை அமெரிக்காவுடன் பகிர்ந்து கொண்டன என்றார்.

இதனால் கொரிய தீபகற்ப பகுதியில் போர் பதற்றம் முன்பை விட தீவிரம் அடைந்துள்ளது.

இதற்கிடையே, ஜனாதிபதி டிரம்ப் நேற்று முன்தினம் வெள்ளை மாளிகையில் தனது நாட்டின் முக்கிய ராணுவ அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். இதில் ராணுவ மந்திரி ஜேம்ஸ் மத்திஸ், ராணுவ ஜெனரல் ஜோசப் டன்போர்டு ஆகியோரும் பங்கேற்றனர்.

அப்போது, தனது நட்பு நாடுகளை வடகொரியா அணு ஆயுதங்கள் மூலம் தாக்கினால் அதற்கு எந்த விதத்தில் பதிலடி தரலாம் என்பது உள்பட பல்வேறு தாக்குதல் முறைகள் பற்றி அவர் விவாதித்தார்.


Next Story