வியட்நாமில் கனமழை: வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 37 பேர் உயிரிழப்பு


வியட்நாமில் கனமழை: வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 37 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 12 Oct 2017 7:07 AM GMT (Updated: 12 Oct 2017 7:07 AM GMT)

வியட்நாமில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 37 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஹனோய்,

தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாமில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. இதனால் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 37 பேர் பலியாகியுள்ளனர். வெள்ளத்தில் சிக்கி மாயமான 40 பேரை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர். வெள்ளம் பாதித்த இடங்களில் மீட்புப்பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 200 வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. 18,000-க்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. சுமார் 17,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பலத்த மழையில் சிக்கி 8,000 ஏக்கர் விளைநிலங்கள் சேதமடைந்துள்ளது. மேலும் 40,000க்கும் மேற்பட்ட விலங்குகள் மழையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விலங்குகள் வெள்ள நீரில் அடித்துச்செல்லப்பட்டன. 

மிக நீண்ட கடலோரப்பகுதிகளை வியாட்நாம் நாடு பெற்றிருப்பதால், அங்கு அடிக்கடி இது போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்படுவது வாடிக்கையான ஒன்றாக உள்ளது.  கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 200 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story