பான் ஆம் விமானத்தை கடத்திய பயங்கரவாதிகளின் வயதான புகைப்படங்கள் வெளியீடு


பான் ஆம் விமானத்தை கடத்திய பயங்கரவாதிகளின் வயதான புகைப்படங்கள் வெளியீடு
x
தினத்தந்தி 12 Jan 2018 7:35 AM GMT (Updated: 12 Jan 2018 7:35 AM GMT)

பான் ஆம் விமானத்தை கடத்திய பயங்கரவாதிகளின் வயதான புகைப்படங்கள் தொழில்நுட்ப உதவியுடன் சித்தரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. #PanAmFlight73 | #pakistan

வாஷிங்டன்,

கடந்த 1986-ம் வருடம் செப்டம்பர் 5-ம் தேதி மும்பையிலிருந்து நியூயார்க் நோக்கி அமெரிக்காவைச் சேர்ந்த பான் ஆம் விமானம் பறந்தது. இந்த விமானத்தில் மாடலாக இருந்து விமான பணிப்பெண்ணாக மாறிய இந்தியாவைச் சேர்ந்த  நீர்ஜா பானோத்தும் பணி புரிந்து வந்தார். விமான ஊழியர்கள் தவிர, 379 பயணிகள் இருந்தனர். கராச்சி விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்ப விமானம் தரையிறங்கியது. அப்போது, பான் ஆம் விமானத்தை நோக்கி பாதுகாப்பு படையினர் உடையில் வந்த பயங்கரவாதிகள் விமானத்தை தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

லிபியாவை சேர்ந்த, 'அபு நிதால்' என்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த நான்கு பேரின் கட்டுப்பாட்டில் அந்த அமெரிக்க விமானம் வந்தது. சைப்ராஸ் நாட்டில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும்  தங்கள் கூட்டாளிகளை விடுவிக்க வேண்டும் என்று பயங்கரவாதிகள் கோரிக்கை விடுத்தனர். அமெரிக்கர்களை குறிவைத்து தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் குறிவைத்தனர். 

இதற்கிடையில், பாகிஸ்தான் அரசு தரப்பில் பயங்கரவாதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பதினேழு மணி நேரப் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை. இதையடுத்து, விமானத்தில் சரமாரி தாக்குதலை பயங்கரவாதிகள் நடத்தினர். இதில், 20 பயணிகள் உயிரிழந்தனர்.  இதில் 12 இந்தியர்களும், 2  அமெரிக்கர்களும் அடங்குவர். தனது உயிரையும் பொருட்படுத்தாது விமான பணிப்பெண்ணாக இருந்த நீர்ஜா, சமயோசிதமாக செயல்பட்டு, எமர்ஜென்சி வழியாக பயணிகளை வெளியே அனுப்பினார். இதைக்கவனித்த பயங்கரவாதிகள் நீர்ஜாவை சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவத்தில் 100-க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்தனர். 

இந்த விமானத்தை கடத்திய பயங்கரவாதிகள் வாடவுட் முகம்மது ஹபீஸ் அல் துர்கி, ஜமல் சயீத் அப்துல் ரகீம், முகம்மது அப்துல்லா காலி ஹூசைன் ரஹ்யால் மற்றும் முகம்மது அகமது அல் முன்வர் என்பது தெரியவந்தது. இந்த பயங்கரவாதிகள் பற்றி அளிக்கப்படும் ஒவ்வொரு தகவலுக்கும் 5 மில்லியன் டாலர் வழங்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்தது. அமெரிக்காவின் புலனாய்வு பிரிவான எப்.பி.ஐயின் தேடப்படும் பட்டியலில், மேற்கூறிய பயங்கரவாதிகளின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது. 

இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்று 30 ஆண்டுகளுக்கு மேலாகியும் பயங்கரவாதிகள்  கைது செய்யப்படவில்லை. இந்த சூழலில், எப்.பி.ஐ நான்கு பயங்கரவாதிகளின் வயதான புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. வயது முதிர்ந்த நிலையில், அவர்களின் முகத்தோற்றம் எவ்வாறு இருக்கும் என்பதை தொழில்நுட்ப  உதவியால் எப்.பி.ஐ வெளியிட்டுள்ளது. வாஷிங்டன் பீல்டு அலுவலக முகமையில் இந்த வழக்கு இன்னும் விசாரணையில் உள்ளது. குற்றம் சாட்டப்பட்ட பயங்கரவாதிகளில் ஒரு சிலர் உயிரிழந்ததாக தகவல் வெளியானாலும் அது இன்னும் உறுதிபடுத்தப்படாமலேயே உள்ளது. 

                                                   #PanAmFlight73 | #pakistan


Next Story