உலக செய்திகள்

அமெரிக்காவில் டிரம்ப் அரசுக்கு முன்னணி நிறுவனங்கள் கோரிக்கை + "||" + United States Leading companies request

அமெரிக்காவில் டிரம்ப் அரசுக்கு முன்னணி நிறுவனங்கள் கோரிக்கை

அமெரிக்காவில்
டிரம்ப் அரசுக்கு முன்னணி நிறுவனங்கள் கோரிக்கை
அமெரிக்காவில் ‘எச்-1 பி’ விசாதாரர் வாழ்க்கைத்துணைவருக்கு பணி அனுமதியை தொடர வேண்டும் என்று டிரம்ப் அரசு நிர்வாகத்துக்கு முன்னணி நிறுவனங்கள் கோரிக்கை விடுத்து உள்ளன.
வாஷிங்டன், 

அமெரிக்காவில் பிற உலக நாடுகளை சேர்ந்தவர்கள் தங்கி இருந்து, வேலை செய்வதற்கு ‘எச்-1 பி’ விசா வழங்கப்படுகிறது. இந்த விசாக்களுக்கு இந்தியாவில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இடையே பெருத்த வரவேற்பு உள்ளது.

அமெரிக்கா ஒவ்வொரு ஆண்டிலும் 65 ஆயிரம் ‘எச்-1 பி’ விசாக்களை வழங்குகிறது. அத்துடன், அமெரிக்காவில் உயர்கல்வி பெற்றவர்கள் 20 ஆயிரம் பேருக்கும் கூடுதலாக ‘எச்-1 பி’ விசா வழங்கப்படுகிறது.

பல லட்சம் பேர் இந்த விசா கேட்டு விண்ணப்பிப்பதால், கம்ப்யூட்டர் லாட்டரி குலுக்கல் நடத்தி, விசாதாரர் தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள்.

‘ஒர்க் பெர்மிட்’

அமெரிக்காவில் ஒபாமா ஜனாதிபதியாக இருந்தபோது, ‘எச்-1 பி’ விசாவில் பணியாற்றுகிறவர்களின் வாழ்க்கைத்துணைவர்களுக்கு ‘எச்-4’ விசா வழங்கி, வேலை வாய்ப்பினை பெறுவதற்கு வழி ஏற்படுத்தித் தந்தார்.

இது இந்தியர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது. கணவர் ‘எச்-1 பி’ விசாதாரராக இருந்தால் மனைவிக்கும், மனைவி ‘எச்-1 பி’ விசாதாரராக இருந்தால் கணவருக்கும் ‘எச்-4’ விசாவும், ஒர்க் பெர்மிட் என்னும் பணி அனுமதியும் கிடைத்தது.

ஆட்சி மாற்றத்தால் சிக்கல்

ஆனால் அங்கு ஒபாமாவின் ஆட்சி மாறி, தற்போது டிரம்பின் ஆட்சி நடக்கிறது. இந்த ஆட்சி மாற்றம் உலகளவில் பலதரப்பட்டவர்களுக்கும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. காரணம், டிரம்ப் அமெரிக்க நிறுவனங்களில் அமெரிக்கர்களுக்குத்தான் வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார்.

இந்தநிலையில், ‘எச்-1 பி’ விசாவில் அமெரிக்காவில் வேலை செய்கிற வெளிநாட்டினரின் வாழ்க்கைத்துணைவர்களுக்கு (எச்-4 விசாதாரர்களுக்கு) அங்கு வேலை பார்ப்பதற்கு வழங்கி வந்த அனுமதியை விலக்கிக்கொள்வது குறித்து அந்த நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பு துறை பரிசீலிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களுக்கு இடியாக வந்து இறங்கி உள்ளது.

கோரிக்கை

இந்த நிலையில் ஆப்பிள், மைக்ரோசாப்ட், பேஸ்புக், கூகுள் நிறுவனங்களை உள்ளடக்கிய, அமெரிக்க வர்த்தக சபை, தகவல் தொழில்நுட்ப துறை கவுன்சில், பி.எஸ்.ஏ. என்னும் ‘தி சாப்ட்வேர் அலையன்ஸ்’ ஆகியவை ஒன்றிணைந்து டிரம்ப் அரசு நிர்வாகத்துக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளன.

இந்தக் கடிதம், அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் அமைப்பின் இயக்குனர் லீ பிரான்சிஸ் சிஸ்னாவுக்கு எழுதப்பட்டு உள்ளது.

கடிதத்தில், “எச்-4 விசா விதிகளில் டிரம்ப் நிர்வாகம் ஆய்வு செய்கிறது என அறிகிறோம். வர்த்தகம் மற்றும் அமெரிக்க பொருளாதாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், தாங்களும் தங்களின் கீழ் பணியாற்றும் மற்றவர்களும் எச்-4 விசா திட்டத்தை அப்படியே தொடர வேண்டும் என்று வேண்டுகிறோம்” என்று கூறப்பட்டு உள்ளது.

இதன்மூலம் ‘எச்-1 பி’ விசாதாரர்களின் வாழ்க்கைத்துணைவர்களுக்கு “எச்-4’ விசாவும், பணி அனுமதியும் தொடர்ந்து வழங்க வேண்டும் என்று டிரம்ப் அரசுக்கு அழுத்தம் தரப்பட்டு உள்ளது.