பிரான்ஸ் நாட்டில் அகதிகள் இடையே மோதல், துப்பாக்கிச்சூடு


பிரான்ஸ் நாட்டில் அகதிகள் இடையே மோதல், துப்பாக்கிச்சூடு
x
தினத்தந்தி 2 Feb 2018 10:15 PM GMT (Updated: 2 Feb 2018 7:50 PM GMT)

பிரான்ஸ் நாட்டின் கலாய்ஸ் நகரில் அகதிகள் இரு தரப்பினர் இடையே திடீரென மோதல் வெடித்தது.

பாரீஸ்,

பிரான்ஸ் நாட்டின் துறைமுக நகரம் கலாய்ஸ். இங்கு ஆப்கானிஸ்தான் மற்றும் எரிட்ரியா நாடுகளை சேர்ந்த 800 அகதிகள் உள்ளனர். இந்த நிலையில், இரு தரப்பினர் இடையே நேற்று முன்தினம் திடீரென மோதல் வெடித்தது. இதில் துப்பாக்கிச்சூடும் நடைபெற்றது.

இதில் எரிட்ரியாவை சேர்ந்த அகதிகள் 5 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் 16-18 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவார்கள். 4 பேர் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஒருவர் லில்லி நகர் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டார். 5 பேரின் நிலைமையும் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இரும்பு கம்பிகளைக் கொண்டு தாக்கிக்கொண்டதில் 13 பேர் காயம் அடைந்து உள்ளனர். உணவு வாங்குவதற்காக வரிசையில் நின்றபோதுதான் இரு தரப்பினரும் மோதிக்கொண்டதாக தகவல்கள் கூறுகின்றன.

சம்பவ இடத்துக்கு பிரான்ஸ் உள்துறை மந்திரி ஜெரார்டு கொலாம்ப் சென்று பார்வையிட்டார். இரு தரப்பினர் இடையேயான இந்த மோதல் மிகத்தீவிரமானது என்று அவர் கூறினார்.

ஆப்கானிஸ்தான் அகதிகள்தான் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த மோதல் காரணமாக அங்கு அகதிகள் மத்தியில் பதற்றம் நிலவுகிறது. கலாய்ஸ் நகரில் நீண்ட காலமாகவே அகதிகள் இடையே பிரச்சினை நிலவி வருவது குறிப்பிடத்தக்கது. 

Next Story