கடுமையான அரசியல் குழப்பம்: மாலத்தீவில் நீதிபதிகள் கைது


கடுமையான அரசியல் குழப்பம்: மாலத்தீவில் நீதிபதிகள் கைது
x
தினத்தந்தி 6 Feb 2018 11:00 PM GMT (Updated: 6 Feb 2018 7:55 PM GMT)

கடுமையான அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் மாலத்தீவு நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு உள்ளது. அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதில் இந்தியா தலையிட முன்னாள் அதிபர் முகமது நஷீத் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

மாலி,

குட்டி நாடான மாலத்தீவு நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு கடந்த வாரம் பரபரப்பான ஒரு தீர்ப்பை அளித்தது. அதில், சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு உள்ள முன்னாள் அதிபர் முகமது நஷீத் உள்ளிட்ட 9 அரசியல் தலைவர்களை விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.

மேலும், அதிபர் யாமீன் அப்துல் கயூமின் மாலத்தீவு முன்னேற்ற கட்சியின் 12 எம்.பி.க்களை தகுதி நீக்கம் செய்தது செல்லாது என்றும் கூறப்பட்டு உள்ளது. இந்த தீர்ப்பை அதிபர் யாமீன் அப்துல் கயூம் ஏற்கவில்லை. இது அங்கு அரசியல் குழப்பங்களுக்கு காரணமாக அமைந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அங்கு திடீரென அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு உள்ளது.  அவசர நிலை பிரகடனம் செய்த சில மணி நேரத்துக்குள் அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டை பாதுகாப்பு படைகள் முற்றுகையிட்டன. அங்கு இருந்த தலைமை நீதிபதி அப்துல்லா சயீத், நீதிபதி அலி ஹமீத் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

மேலும், அந்த நாட்டின் முன்னாள் சர்வாதிகாரியும், எதிர்க்கட்சி அரசியல்வாதியுமான மாமூன் அப்துல் கயூம், பாதுகாப்பு படையினரால் வீட்டில் இருந்து அழைத்துச் செல்லப்படும் காட்சியை அவரது மகள் வெளியிட்டு உள்ளார்.

அதிபர் யாமீன் அப்துல் கயூமின் முக்கிய அரசியல் எதிரியான முன்னாள் அதிபர் முகமது நஷீத், அவசர நிலை பிரகடனத்தை ஏற்கவில்லை. தற்போது மாலத்தீவில் ஏற்பட்டு உள்ள அரசியல் நெருக்கடி குறித்து முகமது நஷீத் கருத்து தெரிவித்து உள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்போது, ‘‘மாலத்தீவில் அவசர நிலையை பிரகடனம் செய்து இருப்பது, மக்களின் அடிப்படை சுதந்திரத்தை தடை செய்திருப்பது, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை நிராகரித்து இருப்பது, ராணுவ ஆட்சியை பிரகடனம் செய்வதற்கு வழிவகுக்கும். அவசர நிலையை அறிவித்து இருப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. சட்டவிரோதமானது. இதை யாரும் பின்பற்றத் தேவை இல்லை’’ என்று கூறி உள்ளார்.

மேலும், இந்த அரசியல் நெருக்கடியை முடிவுக்கு கொண்டுவர இந்தியா உதவ வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

இதுபற்றி அவர் டுவிட்டரில் விடுத்து உள்ள செய்தியில், ‘‘மாலத்தீவுக்கு இந்தியா ஒரு தூதரை அனுப்பி, அங்கு உள்ள அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும். மாலத்தீவு தலைவர்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிக்க வேண்டும்’’ என்று கூறி உள்ளார்.

Next Story