3வது மாடியில் இருந்து தவறிவிழுந்த சிறுவனை காப்பாற்றிய போலீஸ் அதிகாரி - வீடியோ


3வது மாடியில் இருந்து தவறிவிழுந்த சிறுவனை காப்பாற்றிய போலீஸ் அதிகாரி - வீடியோ
x
தினத்தந்தி 23 Feb 2018 11:09 AM GMT (Updated: 23 Feb 2018 11:09 AM GMT)

எகிப்து நாட்டில் மூன்றாவது மாடியில் இருந்து தவறிவிழுந்த ஐந்து வயது சிறுவனை போலீஸ் அதிகாரி ஒருவர் தாங்கிப்பிடித்து காப்பாற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.

கெய்ரோ:

எகிப்து நாட்டின் அசியுட் மாகாணத்துக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 17-ம் தேதி ஐந்து வயது சிறுவன் ஒருவன் குடியிருப்பின் மூன்றாவது மாடியின் பால்கனியில் தொங்கியவாறு இருந்துள்ளான். அப்பகுதியில் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் உடனடியாக மீட்புப்பணியில் இறங்கினர்.  

ஒரு போலீஸ் அதிகாரி அங்கிருந்த ஒரு போர்வையை எடுத்து சிறுவனை தாங்கிப்பிடிப்பதற்காக தயார் செய்தார். மற்றொரு அதிகாரி அருகில் உள்ளவர்களை உதவவருமாறு அழைக்க சென்றார். மூன்றாவது அதிகாரி சிறுவனுக்கு நேராக கீழே நின்று பிடிக்க தயாரானார். அப்போது அந்த சிறுவன் கைதவறி கீழே விழுந்தான்.

நல்ல வேளையாக அந்த சிறுவனை மூன்றாவது அதிகாரி தாங்கிப்பிடித்தார். இதனால் இருவரும் கீழே விழுந்தனர். அந்த சிறுவனை போலீஸ் அதிகாரி தாங்கிப்பிடித்ததால் அவனுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. அந்த போலீஸ் அதிகாரிக்கு சிறிய அளவிலான காயம் ஏற்பட்டது. அவர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அந்த சிறுவன் எவ்வாறு பால்கனி சுவரை தாண்டி வெளியே வந்தான். அப்போது அவனது பெற்றோர் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பது பற்றி எந்த தகவலும் இல்லை. அந்த போலீஸ் அதிகாரிகளின் மீட்புப்பணிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. தற்போது எகிப்து நாட்டின் உள்துறை அமைச்சகம் பேஸ்புக்கில் வீடியோவை  பதிவு செய்துள்ளது. அந்த வீடியோவை பார்த்த பலரும் அந்த போலீஸ் அதிகாரியை பாராட்டி வருகிறார்கள். அந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.



Next Story