‘எச்–1 பி’ விசா பெற புதிய கட்டுப்பாடுகள்


‘எச்–1 பி’ விசா பெற புதிய கட்டுப்பாடுகள்
x
தினத்தந்தி 23 Feb 2018 11:00 PM GMT (Updated: 23 Feb 2018 6:35 PM GMT)

அமெரிக்காவில் வெளிநாட்டினர் தங்கி வேலை செய்வதற்கு ‘எச்–1 பி’ விசா வழங்கப்படுகிறது.

வாஷிங்டன்,

இந்தியாவைப் பொறுத்தமட்டில், தகவல் தொழில் நுட்பத்துறையில் வேலை செய்கிறவர்களிடையே இந்த விசாவுக்கு பெரும் வரவேற்பு இருக்கிறது.

ஒவ்வொரு நிதி ஆண்டிலும் 65 ஆயிரம் ‘எச்–1 பி’ விசாக்களை அமெரிக்கா வழங்கி வருகிறது.

இந்த நிலையில், அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்ப், ‘அமெரிக்க பொருட்களையே வாங்க வேண்டும், அமெரிக்கர்களையே பணி நியமனம் செய்ய வேண்டும்’ என்ற கொள்கையை நடைமுறைப்படுத்தி இருக்கிறார். இதன்காரணமாக அமெரிக்காவில் மற்ற நாட்டினர் பணியாற்றுவதை குறைத்துக்கொள்வதற்கான நடவடிக்கையில் அமெரிக்க அரசு முனைப்பாக உள்ளது.

அந்த வகையில் இப்போது ‘எச்–1 பி’ விசாக்களை வழங்குவதில் புதிய கட்டுப்பாடு விதிக்கும் கொள்கையை அமெரிக்கா அமலுக்கு கொண்டு வந்து உள்ளது. இந்த கொள்கையினால், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட 3–வது நபர் பணித்தளங்களில் பணியாற்றப்போகிறவர்களுக்கு விசா பெறுவது கடுமையாகிறது.

இதனால், இந்திய தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களும், அவற்றின் ஊழியர்களும் கடுமையாக பாதிக்கப்படுகிற நிலை உருவாகி உள்ளது.

இதுவரை ‘எச்–1 பி’ விசா ஒரே நேரத்தில் 3 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டு வந்தது. இனி 3–ம் நபர் பணித்தளத்தில் வேலை பார்க்கும் காலம் வரை மட்டுமே வழங்கப்படும். அதாவது 3 ஆண்டுக்கு குறைவான காலகட்டத்துக்குத்தான் வழங்கப்படும்.

3–வது நபர் பணித்தளத்தில் பணியாற்றுவதற்கு விசாவுக்கு விண்ணப்பிக்கிறபோது நிறுவனங்கள் அவர்களின் கல்வித்தகுதி, வழங்கப்படும் பணி, வேலைத்திறன் உள்ளிட்டவை பற்றி குறிப்பிட்டு அதற்கான சான்று ஆவணங்களையும் இணைக்க வேண்டும்.

ஏற்கனவே ‘எச்–1 பி’ விசா நீட்டிப்புக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அமெரிக்கா கொண்டு வந்து உள்ள நிலையில், இப்போது ‘எச்–1 பி’ விசா வழங்குவதற்கும் புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வந்து இருப்பது, அமெரிக்காவின் நலனையொட்டித்தான் என தகவல்கள் கூறுகின்றன.


Next Story