பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தால் இந்தியாவும் சீனாவுமே பயன்பெறும்: டொனால்டு டிரம்ப்


பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தால் இந்தியாவும் சீனாவுமே பயன்பெறும்: டொனால்டு டிரம்ப்
x

பாரிஸ் பருவ நிலை ஒப்பந்தத்தால் இந்தியாவும் சீனாவுமே பயன்பெறும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் விமர்சித்துள்ளார். #DonaldTrump #ParisClimateDeal

வாஷிங்டன்,

காற்றில் கார்பன்டை ஆக்சைடு கழிவுகள் அதிகமாக கலப்பதால் பருவ நிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் பனி ஆறுகள் உருகி கடல் நீர் மட்டம் உயர்ந்து பல தீவுகள் கடலில் முழ்கும் அபாயம் உள்ளது. அளவுக்கு அதிகமாக மழையும், வறட்சியும் ஏற்படுகிறது. 

இதனையடுத்து, உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் மாசுபாடு தொடர்பாக ஐ.நா. சபையில் உள்ள நாடுகள் பாரிஸ் நகரில் ஒன்று கூடி ஒருமனதாக வரைவு ஒப்பந்தம் ஒன்றினை உருவாக்கினர். அந்த ஒப்பந்தத்தின் படி, வளர்ச்சியடைந்த நாடுகள் தங்களிடம் உள்ள நிலக்கரி மற்றும் அனல் மின்நிலையங்களை மொத்தமாக மூடுவது என்றும், வளரும் நாடுகள் படிப்படியாக மூடுவதென்றும் முடிவு செய்யப்பட்டது.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமாவும் ஒப்புதல் அளித்திருந்தார். ஆனால், தற்போதைய அதிபர் டிரம்ப் பாரீஸ் ஒப்பந்தத்திற்கு எதிரான மனநிலையை தொடக்கம் முதலே கொண்டிருந்தார். 

பாரீஸ் ஒப்பந்தத்திற்கு அமெரிக்க தொழிலதிபர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தையடுத்து, பாரிஸ் பருவ நிலை ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக கடந்த ஜூன் மாதம் டொனால் டிரம்ப் தெரிவித்து இருந்தார். இந்த ஒப்பந்தத்தின் மூலம் வளரும் நாடுகளான இந்தியா, சீனா போன்றவையே அதிக அளவில் பயன்பெறுவதாக குற்றம் சாட்டி இருந்தார். 

இந்த நிலையில், அமெரிக்காவின் கன்சர்வேட்டிவ் தொழிலாளர் செயல் குழுவினர் மத்தியில் உரையாற்றிய டொனால்டு டிரம்ப், கடந்த ஆண்டு பாரிஸ் பருவ நிலை ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியதை நியாயப்படுத்தி பேசினார்.  டொனால்டு டிரம்ப் கூறுகையில், “ பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து நாம் வெளியேறினோம். 

ஒப்பந்தத்தில் தொடர்ந்து இருந்தால், நமது நாட்டுக்கு மோசமான விளைவு ஏற்பட்டு இருக்கும். இந்தியாவும் சீனாவும் மட்டுமே இந்த ஒப்பந்தத்தால் பலன் பெறும். அமெரிக்காவுக்கு எந்த பலனும் பாரிஸ் பருவ நிலை ஒப்பந்தத்தால் ஏற்பட போவது இல்லை. அமெரிக்காவின் வேலை வாய்ப்புகளையும் தொழில்களையும் கடுமையாக பாதிக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் அமைந்து இருந்தது. வளர்ந்த நாடு என கூறி அமெரிக்கா தனது வளங்களை பயன்படுத்த கடிவாளம் போடும் இந்த ஒப்பந்தத்தை நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்” என்றார். 

Next Story