தொடர்ந்து 2 முறைக்கு மேல் பதவி வகிக்க சீன அதிபருக்கு தடை நீங்குகிறது


தொடர்ந்து 2 முறைக்கு மேல் பதவி வகிக்க சீன அதிபருக்கு தடை நீங்குகிறது
x
தினத்தந்தி 25 Feb 2018 10:30 PM GMT (Updated: 25 Feb 2018 7:02 PM GMT)

சீன அதிபராக உள்ள ஜின்பிங் (வயது 64), அந்த நாட்டின் வலிமைமிக்க தலைவராக திகழ்கிறார்.

பீஜிங்,

சீன கம்யூனிஸ்டு கட்சியின் தலைவர் மற்றும் ராணுவத்தின் தலைவர் பதவியையும் அவர்தான் வகித்து வருகிறார்.

அவர் தொடர்ந்து 2–வது முறையாக அதிபராக கடந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். 2023–ம் ஆண்டு இந்த பதவிக்காலம் முடிகிறது. அங்கு ஒருவர் 2 முறைக்கு மேல் தொடர்ந்து அதிபர் பதவி வகிக்க முடியாதபடிக்கு தடை உள்ளது. இந்த தடையை அகற்ற இப்போது முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக சீன அரசியல் சட்டத்தில் உள்ள பிரிவை நீக்குவது என சீன கம்யூனிஸ்டு கட்சியின் மத்தியக்குழு முடிவு எடுத்து இருக்கிறது. இதன்மூலம் சீன அதிபரும், துணை அதிபரும் 2 முறைக்கு மேல் தொடர்ந்து பதவி வகிக்க முடியும். இந்த தகவலை சீன அரசின் ‘சின்குவா’ செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.

பீஜிங்கில் இன்று தொடங்குகிற கட்சியின் 3 நாள் கூட்டத்தில் இதுபற்றி அதிகாரப்பூர்வமாக முடிவு எடுத்து அறிவிக்கப்படுகிறது.

இந்த முடிவை எடுத்துவிட்டால், ஜின்பிங் 2023–ம் ஆண்டுக்கு அப்பாலும் அதிபர் பதவி வகிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story