வங்காளதேச முன்னாள் அதிபர் கலிதா ஜியாவிற்கு மார்ச் 13 ஆம் தேதி வரை ஜாமீன் நீட்டிப்பு


வங்காளதேச முன்னாள் அதிபர் கலிதா ஜியாவிற்கு மார்ச் 13  ஆம் தேதி வரை ஜாமீன் நீட்டிப்பு
x
தினத்தந்தி 26 Feb 2018 9:49 AM GMT (Updated: 26 Feb 2018 10:25 AM GMT)

வங்காளதேச முன்னாள் அதிபர் கலிதா ஜியாவிற்கு மார்ச் 13 ஆம் தேதி வரை ஜாமீன் நீட்டிக்கப்பட்டுள்ளது. #KhaledaZia

டாக்கா,

வங்காளதேசம் நாட்டின் பிரதமராக பதவி வகித்த கலிதா ஜியா ஆட்சிக் காலத்தின்போது அவரது பெயரால் இயங்கிவரும் அறக்கட்டளைகளுக்காக வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக பல லட்சம் அமெரிக்க டாலர்கள் நன்கொடை பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக கலிதா ஜியா அவரது மகன் தாரிக் ரஹ்மான் மற்றும் உதவியாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு டாக்காவில் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், மறுவிசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கலிதா ஜியா சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், மறு விசாரணைக்கு உத்தரவிட முகாந்திரம் இல்லை என்று கூறிய ஐகோர்ட், கலிதா ஜியாவின் மனுவை தள்ளுபடி செய்தது. சுப்ரீம் கோர்ட்டும் இந்த தீர்ப்பை உறுதி செய்தது.  இதையடுத்து சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. 

இந்நிலையில், ஜியா அனாதை இல்ல அறக்கட்டளைக்கு முறைகேடாக 2.5 லட்சம் டாலர்கள் நன்கொடை பெற்றதாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணை முடிவடைந்ததையடுத்து கடந்த 8 (பிப்ரவரி) ஆம் தேதி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.  கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் மற்றும் 4 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், கலிதா ஜியா ஜாமீன் கோரி தாக்கல் செய்த ஒரு மனு அந்நாட்டில் உள்ள டாக்கா சிறப்பு நீதிமன்ற நீதிபதி முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வரும் மார்ச் 13 ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அதுவரை கலிதா ஜியாவிற்கு ஜாமீன் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். முன்னதாக, கலிதா ஜியா ஜாமீன் கோரி அந்நாட்டு ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த ஐகோர்ட், இன்னும் ஆவணங்கள் கிடைத்த பிறகே தீர்ப்பளிக்க முடியும் என கூறி தீர்ப்பை ஒத்திவைத்து இருந்தது. 

வங்காளதேசத்தின் தற்போதைய அதிபர் ஷேக் ஹசீனாவின் அரசியல் எதிரியாக பார்க்கப்படும் கலிதா ஜியா மீது 34 வழக்குகள் நிலுவையில் உள்ளன. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ள இந்த வழக்குகள்  பெரும்பாலும் ஊழல் வழக்குகளாகும். ஊழல் குற்றச்சாட்டுக்களால், கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற அந்நாட்டு  தேர்தலில் போட்டியிட முடியாமல் புறக்கணிக்க வேண்டிய நெருக்கடிக்கு ஜியா தள்ளப்பட்டார். இதன் காரணமாக அப்போது, வங்காள தேசம் முழுவதும் பெரும் போராட்டங்கள் நடைபெற்றன. வரும் டிசம்பர் மாதம் வங்காளதேசத்தில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கலிதா ஜியாவை போட்டியிடாமல் வைக்க  ஆளும் கட்சி செய்யும் சதியே இது என்று கலிதா ஜியா ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.

Next Story