புளோரிடா சர்வதேச பல்கலைக்கழகத்தில் நடைபாதை மேம்பாலம் இடிந்து 4 பேர் பலி


புளோரிடா சர்வதேச பல்கலைக்கழகத்தில்  நடைபாதை மேம்பாலம் இடிந்து 4 பேர் பலி
x
தினத்தந்தி 16 March 2018 1:55 AM GMT (Updated: 16 March 2018 1:55 AM GMT)

புளோரிடா சர்வதேச பல்கலைக்கழகத்தில் நடைபாதை மேம்பாலம் இடிந்து விழுந்து 4 பேர் பலியாயினர். #MiamiBridgeCollapse

அமெரிக்கா,

அமெரிக்காவில் மியாமியில் உள்ள புளோரிடா சர்வதேச பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை மதியம் புதிதாக நிறுவப்பட்ட நடைபாதை மேம்பாலம் ஒன்று உடைந்ததில் குறைந்தது 4 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் படுகாயம் அடைந்தனர். மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த பல்கலைகழகத்தை ஒட்டி ஒரு தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இங்கு வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் இந்த சாலையை கடப்பது கடினமாகவும், ஆபத்தானதாகவும் இருந்துள்ளது. இதனால் அந்த சாலையின் குறுக்கே பொதுமக்கள் நடந்துசெல்வதற்காக ஒரு சிறிய பாலம் அமைக்கும் பணிகள் கடந்த வாரம் முதல் நடைபெற்று வந்தது. இந்நிலையில், நேற்று அந்த 950 டன் எடையுள்ள மேம்பாலம் திடீரென இடிந்து விழுந்தது.

சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ மூலம் குறைந்தபட்சம் ஜந்து முதல் ஆறு வாகனங்கள் பாலத்தின் கீழே சிக்கியுள்ளது தெரியவந்துள்ளது.  நேரடி தொலைக்காட்சி அறிக்கைகளில் காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டு செல்வதை காண முடிந்தது. 950 டன் எடைகொண்ட இந்த பாலம் சரிந்ததால் போக்குவரத்து கடும் நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் அந்த பகுதிக்கு செல்வது தடை செய்யப்பட்டது.

இது சம்பவம் குறித்து புளோரிடா கவர்னர் ரிக் ஸ்காட் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் ,’ மியாமி-டாடே போலீஸ் உயர்அதிகாரிகளுடன் பேசியதோடு தொடர்ந்து நிலைமையை கண்காணிக்கும் படி கேட்டுக்கொண்டேன். மேலும் இந்த சம்பவத்தை பற்றி உள்ளூர் சட்ட அமலாக்கப்பிரிவு மற்றும் பல்கலைகழக அதிகாரிகளிடம் கேட்டு உறுதிப்படுத்தி கொண்டு அங்கு விசாரிப்பதற்கு சென்று கொண்டிருக்கிறேன்’, என தெரிவித்திருந்தார்.


Next Story