தைவான் கடற்பகுதிக்குள் நுழைந்த சீன விமானந்தாங்கி கப்பலால் பதற்றம்


தைவான் கடற்பகுதிக்குள் நுழைந்த சீன விமானந்தாங்கி கப்பலால் பதற்றம்
x
தினத்தந்தி 21 March 2018 11:46 AM GMT (Updated: 21 March 2018 11:46 AM GMT)

தைவான் கடற்பகுதிக்குள் சீனாவின் விமானந்தாங்கி கப்பல் நுழைந்துள்ள நிலையில் அங்கு பதற்றம் எழுந்துள்ளது. #AircraftCarrier

தைபே,

சீன அதிபராக 2வது முறையாக தேர்வு செய்யப்பட்ட ஜீ ஜின்பிங் நேற்று சீன நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையின்பொழுது, சீனாவை பிரிப்பதற்கான முயற்சிக்கு எதிராக எச்சரிக்கை செய்யும் வகையில் பேசினார்.

அவர், நாட்டை பிரிக்கும் அனைத்து செயல்களும் மற்றும் தந்திரங்களும் தோல்வியில் முடிந்துள்ளன.  இந்த செயல்களுக்கு நாட்டு மக்கள் கண்டனம் தெரிவித்திடுவார்கள்.  வரலாறால் தண்டிக்கப்படவும் கூடும் என கூறினார்.

தொடர்ந்து அவர், சீன மக்களும், சீன நாடும் நமது நிலத்தின் ஒரு அங்குல நிலத்தை கூட விட்டு கொடுக்கக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம். 

நாட்டின் இறையாண்மையையும், பிராந்திய ஒருமைப்பாட்டையும் நாம் பாதுகாப்போம். சீனாவின் வளர்ச்சி, எந்தவொரு நாட்டுக்கும் அச்சுறுத்தலாக அமையாது. சீனா மேலாதிக்கத்திலோ அல்லது விஸ்தரிப்பிலோ ஈடுபடாது என பேசினார்.

கடந்த 1949ம் ஆண்டு நடந்த உள்நாட்டு போரில் சீனாவில் இருந்து பிரிந்து தைவான் தனி நாடாக சென்றது.  தொடர்ந்து அங்கு தனியாகவே ஆட்சி நடந்து வருகிறது.

தைவானை தனது எல்லைக்கு உட்பட்ட பகுதி என்றே சீனா கருதுகிறது.  அதனை தன் நாட்டுடன் மீண்டும் இணைப்பதற்கும், தேவைப்பட்டால் வலுக்கட்டாயப்படுத்தியும் அதற்கான முயற்சியில் ஈடுபட சீனா தயாராக உள்ளது.

ஆனால், தைவான் அதிபராக டிசாய் இங் வென் ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பின்னர் இருதரப்பு நட்புறவு மறைந்தது.  தீவு நாடான தைவான் ஒரே சீனாவின் கீழ் வருவதற்கு அவரது அரசு மறுத்தது.

கடந்த 2016ம் ஆண்டில் அவர் பொறுப்பேற்ற பின், தைவானை சுற்றியுள்ள பகுதிகளில் விமான மற்றும் கப்பற்படை பயிற்சிகளை சீனா அதிகரித்திருப்பதற்கு எதிராக டிசாய் எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

இந்த நிலையில், சோவியத் அரசால் கட்டப்பட்ட சீனாவின் விமானந்தாங்கி கப்பலான லையானிங் தைவானின் கடற்பகுதிக்குள் நுழைந்துள்ளது என தைவானின் பாதுகாப்பு அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.

தைவான் கடற்பகுதிக்குள் லையானிங் மற்றும் துணை கப்பல்கள் நேற்று நுழைந்தன.  இன்று மதியம் அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளன என்றும் தெரிவித்துள்ளது.  நாட்டை பிரிப்பதற்கு எதிராக சீன அதிபர் உரையாற்றிய நிலையில், அதன் ஒரு பகுதியாக இருந்து பிரிந்து சென்ற தைவான் நாட்டு கடற்பகுதியில் சீன கப்பல் நுழைந்துள்ளது பதற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது.


Next Story