உலகைச்சுற்றி...


உலகைச்சுற்றி...
x
தினத்தந்தி 15 April 2018 12:00 AM GMT (Updated: 14 April 2018 6:02 PM GMT)

எகிப்து நாட்டில் பயங்கரவாதிகளுக்கும், எகிப்து நாட்டு படையினருக்கும் இடையேயான தாக்குதலில் 14 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

* எகிப்து நாட்டில் சினாய் தீபகற்ப பகுதியில் பயங்கரவாதிகளின் தாக்குதல் முயற்சியை முறியடித்து உள்ளதாக எகிப்து ராணுவம் கூறுகிறது. இதில் 14 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அதே நேரத்தில் எகிப்து படையினர் 8 பேரும் உயிரிழந்தனர்.

* வெனிசூலா நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதையொட்டி அங்கு இருந்து கொலம்பியா, பிரேசில் நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ள அகதிகளுக்கு அமெரிக்கா சார்பில் 16 மில்லியன் டாலர் (சுமார் ரூ.104 கோடி) நிதி உதவி வழங்கப்படும் என அதன் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் அறிவித்து உள்ளார்.

* பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், அந்த நாட்டின் அரசியல் சாசனம் பிரிவு 62 (1)(எப்)-ன் கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளதால், அவர் தேர்தலில் நிற்கவும், அரசியல் பதவி வகிக்கவும் ஆயுள் கால தடை விதிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பாகிஸ்தான் அரசுக்கு பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கான் வேண்டுகோள் விடுத்து உள்ளார். சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு, புதிய பாகிஸ்தான் காண வழிவகுத்து உள்ளதாகவும் அவர் தெரிவித்து உள்ளார்.

* உள்நாட்டுப்போரினால் இடம் பெயர்ந்து பாகிஸ்தான், ஈரான் போன்ற நாடுகளுக்கு சென்ற ஆப்கானிஸ்தான் மக்களில் 6 லட்சத்துக்கும் அதிகமானோர் கடந்த ஆண்டு நாடு திரும்பி விட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

Next Story