பாகிஸ்தானில் பரபரப்பு: நவாஸ் ஷெரீப்பை தண்டித்த நீதிபதி வீட்டை நோக்கி துப்பாக்கிச்சூடு


பாகிஸ்தானில் பரபரப்பு: நவாஸ் ஷெரீப்பை தண்டித்த நீதிபதி வீட்டை நோக்கி துப்பாக்கிச்சூடு
x
தினத்தந்தி 15 April 2018 11:45 PM GMT (Updated: 15 April 2018 8:58 PM GMT)

நவாஸ் ஷெரீப்பை தண்டித்த பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி இஜாஸ் உல் அசன் வீட்டை நோக்கி மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

லாகூர், 

பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதியாக இருப்பவர், இஜாஸ் உல் அசன். இவரது வீடு, லாகூர் மாதிரி நகரில் உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) இரவு, இவரது வீட்டை நோக்கி மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதன் தொடர்ச்சியாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை மீண்டும் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்களால் உயிரிழப்பு எதுவும் நேரவில்லை என்றாலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

இந்த சம்பவங்கள் குறித்து தகவல் அறிந்ததும், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி மியான் சாகிப் நிசார், நீதிபதி இஜாஸ் உல் அசன் வீட்டுக்கு சென்று பார்வையிட்டார். மேலும், இதுகுறித்து விசாரணை நடத்துமாறு பஞ்சாப் போலீஸ் ஐ.ஜி.க்கு உத்தரவிட்டார்.

மேலும், இந்த துப்பாக்கிச்சூடுகளில் தொடர்பு உடைய குற்றவாளிகளை உடனே கைது செய்யுமாறு பஞ்சாப் மாநில முதல்-மந்திரி ஷாபாஸ் ஷெரீப் உத்தரவிட்டார். இது தொடர்பாக அறிக்கை அளிக்குமாறு அவர் பஞ்சாப் மாகாண போலீஸ் ஐ.ஜி.க்கு உத்தரவிட்டார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த நீதிபதியின் வீட்டுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

துப்பாக்கிச்சூடு நடந்த நீதிபதி இஜாஸ் உல் அசன் வீட்டுக்கு தடயவியல் நிபுணர்கள் சென்று தடயங்களை சேகரித்தனர்.

நீதிபதி இஜாஸ் உல் அசன், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீதான ‘பனாமா கேட்’ ஊழல் வழக்கில் விசாரணை நடத்தி தண்டனை தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட்டின் 5 நீதிபதிகள் அமர்வில் இடம் பெற்று இருந்தவர் என்பதும், அந்த தீர்ப்பினை அமல்படுத்துவதை மேற்பார்வையிடும் குழுவில் அங்கம் வகித்து வந்ததும், நவாஸ் ஷெரீப் குடும்பத்தினர் மீது தேசிய பொறுப்புடைமை கோர்ட்டில் தொடரப்பட்டு உள்ள வழக்குகளை கண்காணித்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.


Next Story