என்னடா மனிதர்கள்? குதித்து ஓடாத கங்காருவை அடித்து கொன்ற பார்வையாளர்கள்


என்னடா மனிதர்கள்?  குதித்து ஓடாத கங்காருவை அடித்து கொன்ற பார்வையாளர்கள்
x
தினத்தந்தி 24 April 2018 7:22 AM GMT (Updated: 24 April 2018 7:22 AM GMT)

சீனாவில் பூங்கா ஒன்றில் குதிக்காமல் படுத்திருந்த கங்காருவை பார்வையாளர்கள் கற்களால் அடித்து கொன்றுள்ளனர். #FuzhouZoo

சீனாவில் தென்கிழக்கே புஜாவ் என்ற விலங்கியல் பூங்கா அமைந்துள்ளது.  இங்கு 12 வயது நிறைந்த பெண் கங்காரு ஒன்று வளர்ந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த பிப்ரவரியில், பூங்காவில் கங்காரு படுத்திருந்துள்ளது.  அங்கு வருகை தந்த பார்வையாளர்கள் துள்ளி ஓடும் விலங்கான கங்காருவை காண்பதற்காக எழுப்பும் நோக்குடன் அதன் மீது கற்களை வீசியுள்ளனர்.  இதனை கண்ட பூங்கா ஊழியர்கள் அவர்களை விரட்டினர்.  கற்களையும் எடுத்து சென்றனர்.

இதனால் கற்கள் கிடைக்காத அவர்கள் செங்கல், கான்கிரீட் கல் ஆகியவற்றை எடுத்து கங்காரு மீது வீசியுள்ளனர்.  இந்த சம்பவத்தில் காயமடைந்த கங்காருவை ஊழியர்கள் மீட்டுள்ளனர்.  அதற்கு பல நாட்கள் சிகிச்சை அளித்துள்ளனர்.  ஆனால் அது ரத்த கசிவால் உயிரிழந்து விட்டது.

கங்காருவை மிக அருகில் இருந்து தாக்கிய புகைப்படங்கள் இந்த வாரம் சீன தொலைக்காட்சிகளில் வெளியாகின.

இதனுடன் இந்த தாக்குதல்கள் நின்று விடவில்லை.  ஒரு சில வாரங்களில் மற்றொரு 5 வயது கங்காரு மீதும் இதே காரணங்களுக்காக தாக்குதல் நடந்துள்ளது.  ஆனால் இதில் அந்த கங்காரு தப்பித்து விட்டது.

பூங்கா விலங்குகள் மீது தாக்குதல் நடத்துவது விதிகளுக்கு எதிரானது.  மனிதநேயமற்ற மனிதர்கள் உள்ள நிலையில் இதுபோன்ற சில விலங்குநேயமற்ற மனிதர்களும் உள்ளனர்.


Next Story