ஆப்கானிஸ்தான் குண்டுவெடிப்பில் சிக்கிய அமெரிக்க வீரருக்கு ஆண் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி


ஆப்கானிஸ்தான் குண்டுவெடிப்பில் சிக்கிய அமெரிக்க வீரருக்கு ஆண் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
x
தினத்தந்தி 24 April 2018 11:30 PM GMT (Updated: 24 April 2018 7:11 PM GMT)

ஆப்கானிஸ்தான் குண்டுவெடிப்பில் சிக்கிய அமெரிக்க வீரருக்கு ஆண் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி அடைந்துள்ளது. மேலும் இது தான் உலகிலேயே முதல் முறையான மாற்று அறுவை சிகிச்சை என தகவல் வெளிவந்துள்ளது.

வாஷிங்டன், 

ஆப்கானிஸ்தானில் பணியாற்றியபோது அமெரிக்க வீரர் ஒருவர் குண்டுவெடிப்பில் சிக்கினார். இதில் அவரது ஆண் உறுப்பும், விதைப்பையும் பெருத்த சேதம் அடைந்தன.

அந்த வீரருக்கு அமெரிக்காவில் மேரிலாந்து மாகாணத்தில் பால்டிமோர் நகரில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் ஆண் உறுப்பு மற்றும் விதைப்பை மாற்று அறுவை சிகிச்சையை சமீபத்தில் வெற்றிகரமாக நடத்தி முடித்து உள்ளனர்.

அவர்கள் இறந்து போன ஒரு கொடையாளியின் ஆண் உறுப்பு, விதைப்பை மற்றும் அடிவயிற்று சுவரின் ஒரு பகுதி ஆகியவற்றை தானமாகப் பெற்று, அந்த வீரருக்கு பொருத்தி உள்ளனர். இந்த அறுவை சிகிச்சையை 11 டாக்டர்களை கொண்ட குழுவினர், 14 மணி நேரம் செய்து உள்ளனர்.

உலகின் முதலாவது ஆண் உறுப்பு மற்றும் விதைப்பை மாற்று அறுவை சிகிச்சை இதுதான் என தகவல்கள் கூறுகின்றன.

ஆண் உறுப்பு மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை செய்கிறபோது, அந்த நபரால் தாம்பத்திய வாழ்வில் ஈடுபட முடியாது.

ஆனால் இந்த வீரருக்கு ஆண் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளதால், அவர் மீண்டும் தாம்பத்திய வாழ்வில் ஈடுபட முடியும் என டாக்டர்கள் தெரிவித்தனர். அவர் 6 முதல் 12 மாதங்களுக்குள் இயல்பான வாழ்க்கை வாழ முடியும் எனவும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

Next Story