ரஷியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் இந்தியாவிற்கு ‘பொருளாதார தடை விதிப்பு’ தொடர்பாக அமெரிக்க எம்.பி.க்கள் கூறுவது என்ன?


ரஷியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் இந்தியாவிற்கு ‘பொருளாதார தடை விதிப்பு’ தொடர்பாக அமெரிக்க எம்.பி.க்கள் கூறுவது என்ன?
x
தினத்தந்தி 26 April 2018 12:46 PM GMT (Updated: 26 April 2018 12:46 PM GMT)

ரஷியாவிடம் இருந்து இந்தியா ‘எஸ்.400- டிரையம்ப்’ வழிமறிப்பு ஏவுகணைகளை வாங்குவதை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகிறது. #Sanction #India #Russia #IndoUSties



புதுடெல்லி/வாஷிங்டன், 



எதிரிநாடுகளிடம் இருந்து வரும் ரகசிய போர் விமானங்கள், உளவு விமானங்கள், ஏவுகணை போன்றவற்றை நடுவானிலேயே இடைமறித்து அழிக்கக் கூடிய ‘எஸ்.400- டிரையம்ப்’ வழிமறிப்பு ஏவுகணைகளை வாங்குவதற்கு இந்தியாவும், ரஷியாவும் 2016-ல் ஒப்பந்தம் செய்துக் கொண்டன. ரஷியாவிடம் இருந்து ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பிலான 'எஸ்.400- டிரையம்ப்' வழிமறிப்பு ஏவுகணைகளை வாங்குவதற்கு இந்தியா முன்நகர்ந்து வருகிறது. 5 இடைமறி ஏவுகணைகளை ரஷியாவிடம் இருந்து வாங்குவதற்கு இறுதி ஒப்பந்தம் விரைவில் செய்யப்படுகிறது.

 தொழில்நுட்பம் தொடர்பான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுவிட்டது எனவும் விலை தொடர்பான விபரங்கள் பேச்சுவார்த்தையின் கீழ் உள்ளதாக தகவல்கள் வெளியாகியது.

 இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சிதாராமன் மாஸ்கோ பயணம் மேற்கொள்ளும் போது இருதரப்பு இறுதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என பார்க்கப்படுகிறது. இந்தியாவுடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திட எதிர்நோக்கி உள்ளோம் என ரஷிய அதிகாரிகள் தெரிவித்ததாக ராய்டர்ஸ் செய்தி வெளியிட்டது.

அமெரிக்காவின் எதிரிகளை எதிர்க்கும் சட்டத்தை (CAATSA) அமெரிக்காவின் டொனால்டு டிரம்ப் அரசு 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொண்டுவந்தது. இவ்வருடம் தொடக்கத்தில் ஜனவரி மாதம் அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தின்படி ரஷியாவுடன் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் நாடுகளை எதிரிநாடுகள் பட்டியலுக்கு தள்ளி பொருளாதார தடைகளை விதிக்க வழிவகை செய்கிறது. இந்தியா இப்போது ரஷியாவிடம் இருந்து ஏவுகணைகளை வாங்குவதில் உன்னிப்பாக இருப்பதால் இச்சட்டத்தின்படி நடவடிக்கை பாயுமா? என்ற கேள்வியும் எழுந்து உள்ளது. இதற்கிடையே சட்டம் தொடர்பாக இந்தியாவுடன் அமெரிக்கா ஆலோசனை நடத்தியதாக அந்நாட்டு அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கிறது என இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டது. ஆனால் இந்தியா இப்போது வாங்கும் ஏவுகணைகள் அமெரிக்காவின் சட்ட விதிகளின் கீழ் வருமா என்பதை நேரடியாக தெரிவிக்க மறுத்துவிட்டதாகவும் செய்தியில் குறிப்பிடப்பட்டது.

பொருளாதார தடை விதிக்க கூடாது

இந்நிலையில் ரஷியாவுடன் இந்தியா ஒப்பந்தம் செய்கிறது என்பதற்காக பொருளாதார தடையை முன்னெடுத்தால் இந்தியா-அமெரிக்கா உறவில் மிகப்பெரிய  பாதிப்பை ஏற்படுத்தும் என அமெரிக்க எம்.பி.க்கள் மற்றும் நிபுணர்கள் எச்சரிக்கையை விடுத்து உள்ளார்கள். 

ரஷியாவிடம் இருந்து ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவிற்கு பொருளாதார தடையை அமெரிக்கா விதிக்க கூடாது என அந்நாட்டு எம்.பி.க்கள் கூறிஉள்ளார். வாஷிங்டன்னில் இந்தியா - அமெரிக்கா இடையிலான நட்புறவு தொடர்பான நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட எம்.பி.க்கள், வல்லுநர்கள், இந்தியா மீது பொருளாதார தடை விதிப்பு என்பது இருநாட்டு உறவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கையை முன்வைத்தார்கள். அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஜோ குரோலே பேசுகையில்,  “அமெரிக்காவின் எதிரிகளை எதிர்க்கும் சட்டமானது முக்கியமான விவகாரம் என்று நான் நினைக்கிறேன், இதனை சரிசெய்ய வேண்டும். இந்தியா மற்றும் அமெரிக்காவிற்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும். நம்முடைய இலக்கானது இந்தியாவின் மீது பொருளாதார தடையை விதிக்க கூடாது என்பதுதான்,” என்றார். 

ஜனநாயகத்திற்கு எதிராக உலகம் முழுவதும் ஸ்திரமற்ற நிலைமையை உருவாக்கும் செயலை ரஷியா செய்துக்கொண்டு இருக்கிறது, எனவே ரஷியாவிற்கு எதிராக பொருளாதார தடைகளை விதிப்பது என்பது முக்கியமானது. மூன்றாம் தரப்பு ஒப்பந்தம் என்று வரும்போது அமெரிக்கா மற்றும் இந்தியா இடையே பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும். இந்தியா தற்பாதுகாப்பு தேவையான நாடு என்பதை புரிந்துக்கொண்டு கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டார் குரோலே. இதேபோன்று நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட எம்.பி.க்கள் மற்றும் வல்லுநர்கள் இந்தியாவிற்கு எதிராக பொருளாதார தடை விதிக்கக்கூடாது என்பதே வலியுறுத்தப்பட்டது.

ரஷியா ‘எஸ்.400- டிரையம்ப்’ வழிமறிப்பு ஏவுகணைகளை இப்போது சிரியாவில் தன்னுடைய பாதுகாப்பு கட்டமைப்பை பாதுகாக்க நிலைநிறுத்தி உள்ளது. ரஷியாவிலும் நிலை நிறுத்தப்பட்டு உள்ளது. ரஷியாவிடம் இருந்து முதலாவதாக சீனா இந்த வழிமறிப்பு ஏவுகணைகளை வாங்கி உள்ளது. சவுதி அரேபியாவும் வாங்குவது தொடர்பான பேச்சுவார்த்தையை மேற்கொண்டது.

Next Story