பாலியல் சர்ச்சையில் சுவீடிஷ் அகாடமி: இலக்கிய நோபல் பரிசு, இந்த ஆண்டு இல்லை


பாலியல் சர்ச்சையில் சுவீடிஷ் அகாடமி: இலக்கிய நோபல் பரிசு, இந்த ஆண்டு இல்லை
x
தினத்தந்தி 4 May 2018 10:15 PM GMT (Updated: 4 May 2018 7:46 PM GMT)

பாலியல் சர்ச்சையில் சுவீடிஷ் அகாடமி சிக்கி உள்ளதால் இலக்கியத்துக்கான நோபல் பரிசு இந்த ஆண்டு கிடையாது. இது அடுத்த ஆண்டுடன் சேர்த்து அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஸ்டாக்ஹோம்,

சுவீடன் நாட்டு விஞ்ஞானி ஆல்பிரட் நோபல், 1895-ம் ஆண்டு தனது உயில் மூலம் நோபல் பரிசை உருவாக்கினார். இந்த நோபல் பரிசு, உலக அளவில் வேதியியல், இலக்கியம், அமைதி, இயற்பியல், மருத்துவம் ஆகிய 5 துறைகளில் சாதனை படைப்பவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது.

1968-ம் ஆண்டு முதல் பொருளாதார துறையும் இதில் சேர்க்கப்பட்டது.

வேதியியல், இலக்கியம், அமைதி, இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம் என பல்வேறு துறைகளுக்கும் வழங்கப்படுகிற நோபல் பரிசினை ஒரே அமைப்பு தேர்வு செய்வதில்லை. இயற்பியல், வேதியியல், பொருளாதாரம் ஆகிய 3 துறைகளுக்கான நோபல் பரிசை தி ராயல் சுவீடிஷ் அறிவியல் அகாடமி தேர்வு செய்கிறது.

மருத்துவத்துக்கான நோபல் பரிசை தி நோபல் அசெம்பிளியும், இலக்கியத்துக்கான நோபல் பரிசை தி சுவீடிஷ் அகாடமியும், அமைதிக்கான நோபல் பரிசை தி நார்வீஜியன் நோபல் கமிட்டியும் முடிவு செய்து அறிவிக்கிறது.

இந்த நிலையில், உலகமெங்கும் பல்வேறு தரப்பு பெண்களும் பாலியல் தொல்லைக்கு ஆளானதை ‘மீ டூ’ என்ற ‘ஹேஷ்டேக்’கில் பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.

இப்போது இலக்கியத்துக்கான நோபல் பரிசை முடிவு செய்து அறிவிக்கிற தி சுவீடிஷ் அகாடமியும் பாலியல் சர்ச்சையில் சிக்கி உள்ளது.

இந்த அகாடமி, தனது உறுப்பினராக உள்ள ஒரு பெண்ணின் கணவர் மீதான பாலியல் குற்றச்சாட்டை கையாண்ட விதம், சர்ச்சையை எழுப்பி உள்ளது. இதில் அந்தப் பெண் உறுப்பினர், தி சுவீடிஷ் அகாடமியில் இருந்து விலகிவிட்டார்.

அவரைத் தொடர்ந்து அகாடமியின் தலைவரும், மேலும் 4 உறுப்பினர்களும் பதவி விலகிவிட்டனர்.

தற்போது தி சுவீடிஷ் அகாடமியில் 11 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். அவர்களில் கெர்ஸ்டின் எக்மான் என்ற உறுப்பினர், சர்ச்சைக்கு உரிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீதான விவகாரத்தில், அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட தடையை அகாடமி கண்டிக்கவில்லை என்று கூறி, 1989-ம் ஆண்டு முதல் செயல்படாமல் இருந்து வருகிறார்.

இதையடுத்துத்தான் இந்த ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து தி சுவீடிஷ் அகாடமி வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

இந்த ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படாது. தற்போதைய சூழலில் அகாடமியின் பெயர் கெட்டிருப்பதாலும், அகாடமி பொதுமக்களின் நம்பிக்கையை இழந்து இருப்பதாலும், இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

2018-ம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு, 2019-ம் ஆண்டு நோபல் பரிசு பெறுபவருடன் சேர்த்து அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

1901-ம் ஆண்டு நோபல் பரிசு முதன்முதலாக வழங்கப்பட்ட காலம்தொட்டு, பாலியல் சர்ச்சை காரணமாக இலக்கியத்துக்கான நோபல் பரிசு இந்த ஆண்டு தான் அறிவிக்காமல் நிறுத்தி வைக்கப்படுகிறது.

இது தொடர்பாக தி சுவீடிஷ் அகாடமியின் செயலாளர் ஆண்டர்ஸ் ஆல்சன் கூறும்போது, “பாரம்பரியத்தை காப்பாற்றுகிற வகையில் இந்த ஆண்டும் இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என சில உறுப்பினர்கள் வாதிட்டனர். ஆனால் மற்றவர்களோ, இந்த ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கிற நிலையில், அகாடமி இல்லை என்றனர்” என குறிப்பிட்டார்.

இதற்கு இடையே பிரான்ஸ் புகைப்பட கலைஞர் ஜீன் கிளாட் அர்னால்ட், தி சுவீடிஷ் அகாடமியின் நிதி உதவி பெற்று ஒரு கலாசார திட்டத்தை செயல்படுத்தி வருகிற நிலையில், அவர் மீது 18 பெண்கள் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தினர். இதனால் கடந்த ஆண்டு நவம்பர் மாதமே, இதில் சர்ச்சைகள் உருவாகத் தொடங்கி விட்டது என தகவல்கள் கூறுகின்றன. 

Next Story