ஹவாய் தீவில் எரிமலை வெடித்தது ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்


ஹவாய் தீவில் எரிமலை வெடித்தது ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்
x
தினத்தந்தி 5 May 2018 7:00 AM GMT (Updated: 5 May 2018 7:00 AM GMT)

ஹவாய் தீவில் நில நடுக்கங்கள் ஏற்பட்டதையடுத்து எரிமலை வெடித்தது ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டனர்

இரண்டு நாட்களுக்குமுன் ஹவாய் தீவில் தொடர்ந்து நில நடுக்கங்கள் ஏற்பட்டதையடுத்து கிலாயூ எரிமலை வெடித்தது. இந்நிலையில் மீண்டும் நிலத்திலிருந்து 30 அடி உயரத்திற்கு எரிமலைக் குழம்பு வெடித்துக் கிளம்புகிறது. சாலைகளில் பிளவுகள் ஏற்படுவதால் அதன் வழியாக எரிமலைக் குழம்பு வெளியேறலாம் என்னும் அச்சத்தில் யாரேனும் வீடுகளை விட்டு வெளியேறாமல் இருந்தால் உடனடியாக வெளியேறுமாறு பாதுகாப்பு ஏஜென்சி அறிவித்துள்ளது. எரிமலைக் குழம்பிலிருந்து வெளியாகும் அபாயகரமான வாயுவான சல்பர் டை ஆக்சைடு அதிக அளவில் காணப்படுவதால் யாரேனும் பாதிக்கப்பட்டால்கூட அவர்களுக்கு அவசர உதவிக் குழுக்கள் உதவ முடியாத சூழல் நிலவுவதாக அது தெரிவித்துள்ளது.

சமீபத்திய எரிமலை வெடிப்பால் இரண்டு வீடுகள் அழிந்து விட்டதாக மேயர் ஹாரி கிம் தெரிவித்துள்ளார். தனது வீட்டை விட்டு வெளியேறிய உள்ளூர்வாசி ஒருவர் கூறும்போது 14 ஆண்டுகளுக்குமுன் இங்கு வந்தேன். அப்போதே இப்படி ஒரு நாள் நடக்கும் என்ற அச்சம் இருந்தது. தற்போது அது நடந்தேவிட்டது. எனது குடும்பம் பாதுகாப்பாக உள்ளது. மற்ற பொருட்கள் போனால் கவலையில்லை. அவற்றை மீண்டும் வாங்கிக் கொள்ளலாம் என்று கூறினார்.

வியாழனன்று ஏற்பட்ட எரிமலை வெடிப்பின் காரணமாக 1700 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர். வெளியேற்றப்பட்டவர்களுக்காக தற்காலிக தங்கும் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில் ஆயிரக்கணக்கான மக்களை வெளியேற்றுவதற்கு உதவுவதற்காகவும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும் தேசிய பாதுகாப்புப் படையிலிருந்து ராணுவ உதவியும் பெறப்பட்டுள்ளதாக ஹவாயின் கவர்னர் டேவிட் இஜ் தெரிவித்துள்ளார்.

Next Story