சீதை பிறந்த இடமான ஜானக்பூர் நகர வளர்ச்சிக்கு ரூ.100 கோடி: நேபாளம் சென்ற பிரதமர் மோடி அறிவிப்பு


சீதை பிறந்த இடமான ஜானக்பூர் நகர வளர்ச்சிக்கு ரூ.100 கோடி: நேபாளம் சென்ற பிரதமர் மோடி அறிவிப்பு
x
தினத்தந்தி 11 May 2018 11:00 PM GMT (Updated: 11 May 2018 8:46 PM GMT)

நேபாளத்தில் சீதை பிறந்த இடமாக கூறப்படும் ஜானக்பூர் நகரின் வளர்ச்சிக்காக ரூ.100 கோடி நிதி உதவி அளிக்கப்படும் என்று பிரதமர் மோடி கூறினார்.

ஜானக்பூர்,

பிரதமர் மோடி 2 நாள் அரசு முறை சுற்றுப்பயணமாக நேற்று காலை அண்டை நாடான நேபாளத்துக்கு சென்றார். மோடி அங்கு செல்வது இது 3-வது முறையாகும். அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்னும் கொள்கை அடிப்படையில் இந்த பயணத்தை அவர் மேற்கொண்டுள்ளார்.

காலை 10.15 மணிக்கு தனி விமானம் மூலம் நேபாளத்தில் உள்ள ஜானக்பூர் விமான நிலையம் சென்றடைந்த அவரை நேபாள ராணுவ மந்திரி ஈஸ்வர் போக்ரெல், 2-வது மாகாண முதல்-மந்திரி லால்பாபு ராவுத் ஆகியோர் வரவேற்றனர்.

சீதையின் பிறப்பிடமாக கூறப்படும் ஜானக்பூரில் சீதாதேவிக்கு 1910-ம் ஆண்டில் கட்டப்பட்டுள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த ஜானகி கோவில் உள்ளது. ஜானக்பூர் சென்றதும் மோடி அந்த கோவிலுக்கு நேரடியாக சென்றார். அவரை கோவில் வளாகத்தில் நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி வரவேற்றார்.

கோவிலில் வளாகத்தில்கூடிய ஆயிரக்கணக்கானோர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மோடியின் வருகையையொட்டி கோவில் மின் விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

பின்னர் அவர் கோவிலில் நடந்த, ‘சோடசோப்பச்சரா‘ என்னும் விசேஷ பூஜையிலும் கலந்து கொண்டார். சீதை மற்றும் ராமர் பற்றி 10 நிமிடங்கள் பக்தி பாடல்கள் ஒலிபரப்பப்பட்டது. அப்போது சீதாதேவியை மோடி மனமுருக வழிபட்டார். கோவிலை அவர் 40 நிமிட நேரம் சுற்றியும் பார்த்தார்.

ஜானக்பூர் சீதை கோவிலுக்கு இந்திய பிரதமர் ஒருவர் செல்வது இதுவே முதல் முறையாகும்.

ஜானக்பூர் கோவிலில் இருந்து அடிவாரத்துக்கு வந்த மோடிக்கு அங்குள்ள பார்ஹபிகா நகரில் அரசு முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு இந்தியாவின் அயோத்தியையும், நேபாளத்தின் ஜானக்பூரையும் இணைக்கும் விதமாக ‘ராமாயண சர்க்கியூட்‘ திட்டத்தின் கீழ் பஸ் சேவையை மோடியும், சர்மா ஒலியும் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

அப்போது பிரதமர் மோடி பேசும்போது, “ஜானக்பூர் நகரின் வளர்ச்சிக்காக இந்தியா ரூ.100 கோடி நிதி உதவி அளிக்கும். ஜானக்பூரையும், அயோத்தியையும் இணைக்கும் பஸ் சேவை திட்டம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இங்கு மக்கள் காட்டும் அன்பு நெகிழ வைக்கிறது. நேபாள மக்கள் இந்தியாவை நோக்கி திரும்புவதாக இது அமைந்திருக்கிறது. என்றார்.

ராமாயண நகரங்களை இணைக்கும் பஸ் சேவை திட்டத்தில் அயோத்தி தவிர நந்திகிராம், ஷிரிங்கவெர்பூர் மற்றும் சித்ரகோட்(உத்தரபிரதேசம்), ராமேசுவரம்(தமிழ்நாடு), பத்ராசலம்(தெலுங்கானா), சீதாமரி, பக்‌ஷார், தர்பங்கா (பீகார்), மகேந்திரகிரி(ஒடிசா), சித்ரகோட்(மத்திய பிரதேசம்), ஜகதல்பூர்(சத்தீஷ்கார்), நாசிக், நாக்பூர்(மராட்டியம்), ஹம்பி(கர்நாடகா) ஆகிய நகரங்களும் இடம்பெற்றுள்ளன.

பிரதமர் மோடி இன்றும்(சனிக்கிழமை) நேபாள நாட்டில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். காட்டுமாண்டு அருகில் உள்ள முக்திநாத், பசுபதிநாத் கோவில்களுக்கும் சென்றும் வழிபடுகிறார். தனது 2 நாள் பயணத்தை முடித்துக்கொண்டு இன்றே அவர் நாடு திரும்புகிறார்.

Next Story